புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

Oct 07, 2026,01:34 PM IST

- கவிஞர் மல்லிகா செல்வராஜ்


வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் 

அந்த சரஸ்வதி வாசிப்பார் வீணை!!

வெள்ளைத் தாள்களில் வீற்றிருக்கும் இந்த 

சரஸ்வதியை வாசிப்போம் நாம்!!


கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

வள்ளல் தன்மையை வழி மொழிந்திடும்!!

பள்ளம் நோக்கி பாயும் பெரு வெள்ளம் போல் 

நல் உள்ளம் பார்த்து நிறைந்திடும் செல்வம்!!


ஓடி வரும் மாணவ மாணவியருக்கு இனிய விடியல்!!

நாடி வரும் வாசகர்களுக்கு சுவையான படையல்!!




பாடி வரும் ஆன்மீக பக்தர்களுக்கு ஆத்ம வழித்துணை!!

தேடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கோ பெரும் புதையல்!!

கலைத் தாயின் கரத்தினில் அடுக்கடுக்காய் 

அழகுற அடுக்கப்பட்ட வளையல்!!


புத்தகத்தால் சிறகடித்து சிறந்திடும் சிந்தை!!

நீ நடத்திடும் மௌனப் புரட்சியோ!

வியத்தகு விந்தை!!

இதற்கென பல்கி பெருகுகிறது 

நித்தம் ஒரு சந்தை!!


கற்பவர்களுக்கு களிப்பேற்றும் கனிரசம் நீ!!

படித்தவர் நெஞ்சை பதப்படுத்தும் பனிமலர் நீ!!

பெறுபவர்களுக்கு பெருமை சேர்க்கும் 

பெருமிதம் நீ!!

காலம் காலமாய் நிலைத்து நிற்கும் 

நித்தியம் நீ!!

சத்தியம் நீ!!


(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்