- ஜெயபாரதி மதிவாணன்
என்னை யாரும் தப்பாக நினைக்கக் கூடாது" என்று கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வது என முடிவெடுத்தேன். முடிவு எடுத்ததோடு சரி. களத்தில் இறங்கவில்லை.
என் தம்பி ஜெயபாலாஜி 2019-ம் வருடம் "அக்கா கம்ப்யூட்டரில் சில செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொள். அவற்றை நன்கு கற்றுக் கொள். கற்ற பின் உனக்கு வேலை தருகிறேன்" என்று கூறினான்.
நான் உடனே கற்பனையில் ஆழ்ந்தேன். கம்ப்யூட்டர் கற்றுப் பெரிய IT கம்பெனியில் வேலை பார்த்து மாட மாளிகை கூட கோபுரம் கட்டி வாழ வேண்டும். கார் வாங்கவேண்டும் என்றும் நினைத்தேன். நமக்குத்தான் சைக்கிள் தானே ஓட்டத் தெரியும். அதனால் ஸ்கூட்டி வாங்கி ஓட்டப் பழகிய பின் கார் வாங்கலாம் என்று நினைத்தேன். இப்படி என் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடியது.
சரி நிஜத்திற்கு வருவோம் என்று என் கணவரிடம் சென்று "உங்கள் லேப்டாப்பை கொடுங்கள்" என்று கேட்டேன். அவர் பிரிண்டிங் வேலையும் செய்து கொண்டே 10, 12, கடைகளுக்கு கம்ப்யூட்டரில் கணக்கு எழுதிக் கொடுத்து க் கொண்டு இருந்தார். அவர் என்னிடம் "உன்னை நம்பிக் கொடுக்க முடியாது. கணக்குகள் அழிந்து விட்டால் சிரமம்" என்று கைவிரித்து விட்டார்.

என் மகன் ராஜாவிடம் கேட்டேன்." என் ஆபீஸ் கணக்கு, கஸ்டமர் விபரங்கள் அனைத்தும் லேப்டாப்பில் இருக்கிறது. அதனால் தர மாட்டேன்" என்று கூறிவிட்டான். என் தம்பியிடம் "லேப்டாப் கிடைக்கவில்லை தம்பி" என்றேன். தம்பி "என்னிடம் 2 லேப்டாப்கள் இருக்கிறது. உனக்கு ஒன்று தருகிறேன்" என்று கூறி அடுத்து விருதுநகர் வரும் போது கொண்டுவந்து கொடுத்தான்.
நான் ராஜாவிடம் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டேன். "எதற்கு வீண் வேலை? சும்மா இருங்கள்" என்று ராஜா சொல்லி விட்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்து சொல்லியும் கொடுத்தான். அப்போது புரிந்த மாதிரி இருந்தது. ராஜா ஆபீஸ் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது.
அன்று மாலை எதிர் வீட்டு கெளதம் வந்தான்.அவனிடம் சொல்லிக்கொடுக்குமாறு கேட்டேன். அவன் வந்து பார்த்து விட்டு "அத்தை இதெல்லாம் நான் முன்பு படித்தது. எனக்கு மறந்துவிட்டது" என்றான். "ராஜா அண்ணன் அவன் ரூமில் இருக்கிறான்.அவனிடம் கேட்டு எனக்குச் சொல்லித்தா" என்றேன்.
ராஜா பத்தே நிமிடங்களில் கெளதமுக்குச் சொல்லிக் கொடுத்தான். கெளதம் எனக்கு ஒரு மணி நேரம் சொல்லிக் கொடுத்து மிகவும் சோர்வடைந்து விட்டான். கௌதம் "அத்தை ,எனக்குப் படிக்க நிறையப் பாடங்கள் இருக்கின்றன. படித்து விட்டு நாளை லீவு. காலையில் வந்து சொல்லிக்கொடுக்கிறேன்" என்றான். "சரி" என்றேன். மறுநாள் காலை 9 மணிக்கு கௌதம் வந்து சொல்லிக்கொத்தான். அவன் சொல்லிக் கொடுத்தது நன்றாக நினைவிருந்தது.
அவன் சென்றவுடன் துணிகளைத் துவைத்தேன். வீடு பெருக்கி Mop போட்டு சுத்தப்படுத்தினேன். காய்கறிகளை அறுத்து சமையல் செய்துமுடித்தேன்.
அப்பாடா! வேலைகள் முடிந்தது. "கம்ப்யூட்டரில் கௌதம் சொல்லிக் கொடுத்ததை செய்துபார்ப்போம்" என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். மூளையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சூரிய ஒளியில் காயப்போட்டு எடுத்தது போல் ஒன்றும் தெரியவில்லை.
மறுபடியும் கௌதமிடம் கேட்டேன். பொறுமையாகக் கால் மணி நேரம் சொல்லித் தந்தான். "பாவம். படிக்கும் பையன் கௌதம் .அவனை விட்டு விடுவோம்" என்று நினைத்தேன். பின்பும் பல சந்தேகங்கள் எனக்குக் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது.
ராஜாவிடம் என் சந்தேகங்களைக் கேட்டேன். "கௌதம் எந்த சந்தேகமும் கேட்காமல் பத்தே நிமிடங்களில் புரிந்து கொண்டான். உங்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள் எழுகின்றன" என்றான்.அவனும் சொல்லிக் கொடுத்து விட்டு ஆபீஸ் சென்றான்.அடுத்து எங்கள் தெருவில் இருக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியை சரளா என்பவரிடம் சந்தேகம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.பக்கத்து வீட்டு நந்தினி, ராஜியையும் விட்டுவைக்கவில்லை.கௌதமின் அண்ணன், சரளாவின் கணவர் , என் தம்பியிடமும் சந்தேகங்கள் கேட்ட வண்ணம் இருந்தேன்.
ஒரு கட்டத்தில் எனக்கு வேறு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. தெருவில் இருக்கும் அனைவரும் என் சந்தேகங்களுக்குப் பயந்து தெருவைக் காலி செய்து விட்டு பழனியிடம் (பழனி கெளதமின் தந்தை. தெரு ஆரம்பத்தில் மளிகை, மற்றும் காய்கறிக் கடை நடத்துபவர்)"ஜெயபாரதி அக்கா கம்ப்யூட்டரைப்பற்றி நன்றாகப்படித்தப் பின் எங்களுக்குச் சொல்லி அனுப்பு பழனி. நாங்கள் வருகிறோம் " என்று சொல்லி விடுவார்களோ? என்ற சந்தேகம்தான் அது. பின் ஒரு வழியாக நன்றாகப் படித்துக் கொண்டேன். நல்ல வேளை. எனக்குப் பயந்து யாரும் வீட்டைக் காலி செய்து கொண்டு போகவில்லை.
என் தம்பி வேலை தரத் தொடங்கினான். மூன்று மாதங்கள் வேலை பார்த்தேன். சம்பளமும் கொடுத்தான். 2020-மார்ச்சில் கொரானா வந்ததும் என் வேலையும் நின்று போனது. நவம்பர் மாதம். முன்பு படித்தது எல்லாம் மறந்து போய் விட்டது. இனிமேல் கௌதமிடம் போனால் கெளதம், அவன் அம்மா ஜோதியிடம் "ஜெயபாரதி அத்தை சந்தேகம் என்று வந்தார்கள் என்றால் நான் வெளியே போயிருக்கிறேன் என்று சொல்லச் சொல்லி விடுவானோ?" என்று அச்சமாக இருக்கிறது. (இப்போது அந்த கௌதம் ஜப்பானில் ரோபோடிக் இன்ஜினியராக பணி ஆற்றி வருகிறான்.)
அந்தளவிற்கு அவர்கள் எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருக்கிறேன் சந்தேகங்களைக் கேட்டு!!!
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?
என்னை விட்டு நீங்காது நின்ற பெரும் கருணை!
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!
Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
{{comments.comment}}