அண்ணன்.. காலம் நல்கிய அற்புதப் பரிசு!
- முனைவர் தி. தங்கலட்சுமி
காலம் நல்கிய அற்புதப் பரிசு
அண்ணன்கள் எனும் ஆனந்தப் பரிசு!
அண்ணன் என்பவன்
பாசத்தின் விளைநிலமானவன்!
தந்தைக்கு நிகரான மற்றுமோர் தந்தையவன்!
நேசம்கொள் இன்பத்தின் ஊற்றவன்!
துன்பத்தின் சாயல் நெருங்க ஒட்டா நேயமானவன்!
சிறுவயதில் கூட்டணி சேர்ந்தே
சேட்டைகள் பல செய்து,
அடிவாங்கினோம் அன்னையிடம் சேர்ந்தே..!
நாம் வளர வளர
நம் அன்பும் வளர்ந்தே
நம்மை பாசமலர்கள் என்றே
ஊரும் உறவும் மெச்சியதே!
ஆண்பிள்ளை என்பதால்
நேரவரையறையின்றி
ஊர்சுற்றிவரும்
வரம் பெற்ற அண்ணனோ...
என் தங்கையும் இந்த அனுபவம்
இப்போது இல்லாவிட்டால்
எப்போது அனுபவிப்பாள்,
என்றே எண்ணி...
ஓர்நாள்,
நடுநிசிக் காட்சி கண்டுவரலாம்
என்றே அன்னைதந்தையர்
அனுமதி பெற்றே...
அழைத்துச் சென்று,
பாதுகாப்பாய் இட்டுச்சென்று,
இரவின் வீதிகளையும்
இருட்டான திரையரங்கின்
திரைக்காட்சிகளையும் காட்டியே
பத்திரமாய் அழைத்துச் சென்றே
பார்த்தறியா இரவெனும் புத்துலகின்
புதிய அனுபவத்தை
என் மன ஏட்டில்
பதியச் செய்தாரே!
தனித்துவம் நிறைந்த தமையன்களே!
எந்தன் சோதனையான வேதனைக் காலத்திலும்
கண்கள் வியர்க்காதிருக்க
மனந்தனில் ஏசி போட்டது போன்ற
நையாண்டிப் பேச்சுகளால்
நயமான நகைச்சுவை கொண்டே
நளினமாய் மனந்துவளாது தாங்கியே,
கஷ்டகாலத்தை கடக்கத்
துணைநின்ற தூயவர்களே!
உங்களுடன் பிறக்கும் வரம் தந்து
என் உடன்பிறப்பான அண்ணன்கள்!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).