புறக்கணிப்பின் உச்சமும், ஒப்பீட்டின் வன்மமும்.. ராமநாதபுரம் கொடூரக் கொலையின் உளவியல் பின்னணி!

Su.tha Arivalagan
Jun 30, 2026,10:19 AM IST

சென்னை: ராமநாதபுரத்தில் சிறுமியை அவரது சொந்த அத்தையே கிணற்றில் தூக்கிப் போட்டு க் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு உளவியல் சிக்கல்கள் இருப்பதாக மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.


உளவியல் ரீதியாக , குற்றம் சாட்டப்பட்ட சபரிகா என்பவரின் இந்த மனநிலை மற்றும் நடத்தையை பல கோணங்களில் பகுப்பாய்வு செய்யலாம். 


மனித மனம் மிகவும் சிக்கலானது. அன்பு, அங்கீகாரம், பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது மனங்கள் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று, வன்மமாக மாறுகின்றன. ராமநாதபுரத்தில் ஐந்து வயது சிறுமி சாய் தீப்தி, அவரது அத்தையாலேயே கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம், வெறும் குடும்பப் பகை மட்டுமல்ல; அதற்குப் பின்னால் பலத்த மன உளைச்சலும் தீவிரமான உளவியல் கோளாறுகளும் மறைந்துள்ளன.


"கார்த்திகை செல்வியின் இரண்டு குழந்தைகளும் அழகாக இருப்பதால்தான் என் மாற்றுத்திறனாளி குழந்தையை யாரும் கவனிப்பதில்லை, வெறுக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டப்பட்ட பெண் கூறிய வாக்குமூலம், அவரது மனதில் தேங்கிக் கிடந்த உளவியல் ரீதியான பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


Wathch Video: ராமநாதபுரத்தை உலுக்கிய சம்பவம்




சபரிகாவின் காதல் திருமணத்தை குடும்பத்தினர் ஏற்காததில் இருந்தே அவருக்கான உளவியல் சிக்கல் தொடங்குகிறது. தொடர்ந்து மாமியார் மற்றும் நாத்தனாரால் அவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்துள்ளார். இந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும்போது, அந்தத் தாழ்வு மனப்பான்மை இரட்டிப்பாகிறது. 


நாத்தனாரின் குழந்தைகள் "அழகாக" இருப்பதாகக் குடும்பத்தினர் கொண்டாடும் போது, சபரிகா தன்னைத் தானே மற்றவர்களுடன் ஒப்பிட்டு, 'தான் ஒரு தோல்வியுற்றவள்' என்ற தீவிரமான தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்.


உளவியலில் 'டிஸ்பிளேஸ்டு அக்ரஷன்' (Displaced Aggression) என்பது ஒரு முக்கியக் கோட்பாடு. நமக்கு ஒருவரிடம் கோபம் இருக்கும், ஆனால் அவரிடம் அதைக்காட்ட முடியாத சூழலில், பலவீனமான வேறொருவர் மீது அந்தக் கோபத்தை வன்மமாகத் தீர்த்துக் கொள்வதே இதுவாகும். இங்கே சபரிகாவிற்கு மாமியார் பூமாதேவி மற்றும் நாத்தனார் கார்த்திகை செல்வி மீதுதான் கோபம். ஆனால், அவர்களை எதிர்க்க முடியாத சூழலில், எந்தத் தப்பும் செய்யாத, தன்னை முழுமையாக நம்பி "அத்தை எங்கே போகிறோம்?" என்று கேட்ட அந்த அப்பாவி சிறுமி மீது தன் ஒட்டுமொத்த வன்மத்தையும் காட்டியுள்ளார். சிறுமியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நாத்தனாருக்கு வாழ்நாள் துயரத்தைக் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.


சபரிகாவிற்கு 11 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. பொதுவாகப் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனச்சோர்வு (Postpartum Depression) ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக, தன் குழந்தை மாற்றுத்திறனாளி என்று தெரியவரும்போது, ஒரு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம், குற்ற உணர்ச்சி மற்றும் சமூக பயம் அளவிட முடியாதது. குடும்பத்தினரின் ஆதரவு இல்லாத நிலையில், இந்த மனச்சோர்வு தீவிரமடைந்து, உண்மை நிலைக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசத்தை இழக்கச் செய்யும் 'போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்ற தீவிர மனப்பிறழ்வாக மாறியிருக்கக் கூடும். இந்த நிலையில் இருப்பவர்கள் தீவிர வன்முறை எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள்.


மனிதர்கள் சமூக விலங்குகள்; அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்ப்பார்கள். சபரிகா தொடர்ந்து குடும்பத்தாரால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தபோது, அவரிடம் 'மாலடாப்டிவ் பிஹேவியர்' (Maladaptive Behavior) எனப்படும் தவறான நடத்தை முறை உருவாகியுள்ளது. 'தனக்குக் கிடைக்காத அன்பு, தன் குழந்தைக்குக் கிடைக்காத அங்கீகாரம் மற்றவர்களுக்கும் கிடைக்கக் கூடாது' என்ற தீவிரப் பொறாமை மற்றும் வன்மமாக (Pathological Envy) இது உருவெடுத்துள்ளது.


இந்தக் கொடூரச் சம்பவம் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், குடும்பங்களுக்குள் நடக்கும் புறக்கணிப்புகளும், குழந்தைகளை ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பேசும் நச்சுத்தனமான சூழலும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதுதான். குறிப்பாக, மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பிறக்கும் குடும்பங்களில், அத்தாய்க்கு கூடுதல் அன்பும் உளவியல் ரீதியான ஆலோசனைகளும் அவசியம் தேவை.


சபரிகா செய்தது சட்டப்படி மன்னிக்க முடியாத கொடூரக் குற்றம் என்றாலும், உளவியல் ரீதியாகப் பார்த்தால், அது ஒரு மனித மனம் ஒட்டுமொத்தமாகச் சிதைந்து, வன்மத்தின் உச்சத்திற்குச் சென்றதன் கொடிய விளைவே ஆகும்.




வாழப்போவது ஒரே ஒரு வாழ்க்கை.. மீண்டும் இதே வாழ்க்கை கிடைக்காது.. அதை அழகாக வாழ வேண்டும்.. வெறுப்பைக் காட்டி என்ன புண்ணியம் கிடைக்கும்.. ஒரு பயனும் கிடையாது.. அண்ணன் தம்பி, அக்கா தங்கை மாமா அத்தை, சித்தப்பா பெரியப்பா.. இதுபோன்ற உறவுகள் மீண்டும் நமக்குக் கிடைக்குமா.. .தெரியாது.. கிடைத்த உறவை அழகாக அனுபவியுங்கள்.. பாசத்தைக் கொட்டிக் கொடுங்கள்.. அதில் கஞ்சத்தனமே வேண்டாம்.. எப்போதுமே யாரிடமும் பாரபட்சமாக நடக்காதீர்கள். அனைவரையும் சமமாக மதியுங்கள், அன்பு காட்டுங்கள். மனதுக்குள் எந்தவிதமான வன்மமும் இல்லாமல் பழகுங்கள்.. இதுதான் இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்க ஒரே வழி.