என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)

Su.tha Arivalagan
Oct 29, 2026,10:08 AM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


எல்லோரும் முன்னே செல்ல,

ஏனோ நான் மட்டும் பின்னால்…

எத்தனை முறை முயன்றாலும்,

ஏமாற்றமே என் முன்னால்!


பிறர் வெற்றியைக் காணும்போது,

மனம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது!

நானும் ஒருநாள் வெல்வேனென்று,

உள்ளம் தினமும் சொல்லத்தான் செய்கிறது!


என் முயற்சிகளை யாரும் காணவில்லை,

என் கண்ணீரை யாரும் அறியவில்லை!

என் அமைதிக்குப் பின்னால் இருக்கும்

ஆயிரம் போராட்டங்கள் புரியவில்லை!




ஆனாலும் நான் ஓயவில்லை,

என் கனவுகளைத் தொலைக்கவில்லை!

வழிகள் எல்லாம் மூடியபோதும்,

வாழ்க்கையிடம் தோற்கவில்லை!


மரமும் ஒருநாளில் வளர்வதில்லை,

மலரும் ஒரே நாளில் மலர்வதில்லை!

காலம் கொஞ்சம் தாமதித்தாலும்,

கனவுகள் பொய்யாகிப் போவதில்லை!


இன்று என்னை அலட்சியப்படுத்தலாம்,

என் திறமையை மறுக்கலாம்!

நாளை என் உழைப்பின் உயரத்தைப் பார்த்து,

அதே உலகம் வியக்கலாம்!


எனக்கான பாதை தனியானது,

என் பயணத்தின் வேகம் தனியானது!

பிறரோடு என்னை ஒப்பிடாமல்,

என் முன்னேற்றத்தை நம்புவேன்!


காத்திருக்கும் காலமெல்லாம்

கண்ணீரோடு கடக்காது!

உழைத்திடும் கைகளுக்கு

ஒருநாள் வெற்றி கிட்டாமல் போகாது!


இன்று என் பெயர் தெரியாமல் இருக்கலாம்,

என் வெற்றி இன்னும் வராமல் இருக்கலாம்!

ஆனால் நம்பிக்கையை மட்டும் இழக்கமாட்டேன்,

என் கனவுகளை ஒருபோதும் கைவிடமாட்டேன்!


எத்தனை தடைகள் வந்தாலும்,

என் பயணத்தைத் தொடர்வேன்!

எத்தனை நாட்கள் ஆனாலும்,

என் இலக்கை அடைந்திடுவேன்!


**இது என் தோல்வியின் கதை அல்ல…

வெற்றிக்காக நான் காத்திருக்கும் கதை!


இன்று இல்லையென்றாலும்,

நாளை இல்லையென்றாலும்,

என் உழைப்பைத் தொடர்வேன்…


ஏனென்றால்…!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)