அப்பா – சொல்லப்படாத அன்பின் முகவரி.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (13)

Su.tha Arivalagan
Nov 14, 2026,12:22 PM IST

- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்


கோபம் கொண்ட முகத்திற்குள்

கொட்டிக் கிடக்கும் அன்பு நீ!

உலகத்திற்குக் கண்டிப்பானவர்,

உன் மகளுக்கு மட்டும் குழந்தை நீ!


நான் கேட்கும் முன்னே அறிந்துகொள்வாய்,

என் ஆசை சொல்லும் முன்னே நிறைவேற்றுவாய்!

விலை என்னவென்று கேட்காத வள்ளல்,

என் சின்னச் சிரிப்புக்காக வாழும் நல்லவர்!


வியர்வையைச் சிந்தி வீடு கட்டி,

வலிகளை மறைத்து வாழ்வைச் செதுக்கி,

என்னையும் அண்ணனையும் படிக்க வைத்து,

எங்கள் எதிர்காலத்திற்கு ஒளியேற்றினாய்!




உன் ஆசைகளை ஓரமாய் வைத்து,

எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுத்து,

இரு பிள்ளைகளின் திருமணமும் கண்டு,

உன் கடமைகளை அன்பால் முடித்தாய்!


பெண் குழந்தையை எப்படிப் பேண வேண்டும்?

தந்தையின் அன்பு எப்படியிருக்க வேண்டும்?

உலகம் பாடம் சொல்லத் தேவையில்லை,

உன்னைப் பார்த்தாலே போதுமப்பா!


என் பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்து,

பேரன்பை அள்ளி அள்ளிக் கொடுத்து,

உன் மகளின் மகிழ்ச்சியிலே இன்று

உன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்கிறாய்!


முத்தானந்தம் என்ற பெயருக்கேற்ப,

முத்தான அன்பைத் தந்தவரே!

என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமே,

என்றும் குறையாத பாசத்தின் முகவரியே!


உன் உழைப்பைச் சொல்ல வார்த்தையில்லை,

உன் தியாகத்திற்கு எல்லையில்லை!

நீ தந்த வாழ்க்கையைத் திருப்பித் தர

இந்த மகளிடம் வழியுமில்லை!


அப்பா…


நீ கட்டிய வீட்டில் சுவர்கள் மட்டுமில்லை,

உன் வியர்வையின் தடயங்கள் இருக்கின்றன!

நாங்கள் அடைந்த உயரத்தில் வெற்றிகள் மட்டுமில்லை,

உன் தியாகத்தின் வேர்கள் இருக்கின்றன!


நாளை உன் கைகள் தளர்ந்தாலும்,

என் கைகள் உன்னைத் தாங்கட்டும்!

நீ எனக்காக வாழ்ந்த அன்பை,

என் வாழ்நாள் முழுவதும் திருப்பித் தரட்டும்!


மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால்,

மீண்டும் உன் மகளாகப் பிறக்க வேண்டும்!

உன் விரல் பிடித்து நடந்த அந்த நாட்களை,

மீண்டும் ஒருமுறை வாழ வேண்டும்!


எத்தனை உறவுகள் கிடைத்தாலும்,

உன்னைப் போன்ற அப்பா கிடைக்காது!

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்,

உன் மகளாகப் பிறந்த பெருமை மறையாது!


முத்தானந்தம் அப்பா…

நீங்கள் என் அப்பா மட்டுமல்ல,

என் வாழ்வின் முதல் ஹீரோ!

என் பிள்ளைகளின் அன்புத் தாத்தா!

என் இதயம் வாழும் வரை

நீங்கள்தான் என் செல்லத் தெய்வம்! 


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)