ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, ஐசிசி (ICC) ஒருநாள் போட்டி (ODI) பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
38 வயது மற்றும் 182 நாட்களில், ரோஹித் சர்மா, இரண்டு இடங்கள் முன்னேறி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக உலகிலேயே நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆகியுள்ளார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்தவர் மற்றொரு இந்திய வீரரும், தற்போதைய கேப்டனுமான சுப்மன் கில் ஆவார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா காட்டிய அசத்தலான ஆட்டமே இந்த தரவரிசை உயர்வுக்குக் காரணம். மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவரே. மேலும், இவருக்கு 'தொடரின் நாயகன்' (Player of the Series) விருதும் கிடைத்தது.
ரோஹித் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் 101 சராசரியுடன் 202 ரன்கள் எடுத்தார். மறுபுறம், சுப்மன் கில் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.
தரவரிசையில் தற்போது ரோஹித் சர்மாமா 781 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் மூன்றாம் இடத்திற்குச் சரிந்தார். ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் 764 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
மூன்றாவது ODI-இல் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்த விராட் கோலி, தற்போது 725 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்யாத ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்திய தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வந்த நிலையில், இந்தச் சாதனை அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக, கில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், ரோஹித் விரைவில் ஓய்வு பெறுவாரோ என்று பல நிபுணர்களும் ரசிகர்களும் யோசித்தனர்.
ஆனால், அவர் ஆஸ்திரேலியாவில் அருமையாக விளையாடினார். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
"இங்கு வந்து விளையாடுவது எப்போதும் பிடிக்கும். 2008-ஆம் ஆண்டின் இனிமையான நினைவுகள் உள்ளன. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவோமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் என்ன சாதனைகள் செய்தாலும், நாங்கள் எங்கள் கிரிக்கெட்டை ரசிக்கிறோம்," என்று ரோஹித் கூறியிருந்தார்.