கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

Su.tha Arivalagan
Feb 14, 2026,05:21 PM IST

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே 'கூட்டணி ஆட்சி' குறித்த விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இது தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


40 சீட் வேணும், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என காங்கிரசின் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து தனது பேட்டிகளிலும், எக்ஸ் தள பதிவுகளிலும் வலியுறுத்தி வருகிறார். இதை மறுத்தோ அல்லது எதிராகவோ தற்போது வரை காங்கிரசை சேர்ந்த மற்ற எவரும் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் ஆட்சியின் பங்கு என்ற விவகாரத்தால் திமுக-காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் பெரிதாகி, கூட்டணியே உடைந்து விடுமோ என்ற பதற்றமும் தொண்டர்கள் இடையே நிலவும்.


இன்று காலை கூட அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதை சுட்டிக் காட்டி, திமுக வெற்றி பெறும் தொகுதிகளை நாங்கள் கேட்கவில்லை. தோல்வி அடைந்த 40 தொகுதிகளை எங்களுக்கு தாருங்கள் என்று தான் கேட்கிறோம்" என நியாயமான முறையில் தங்களின் கோரிக்கையை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள திமுக தலைமை கழக பொறுப்பாளர் ஆர்.எஸ்.பாரதி, இனி வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கே இடமிருக்காது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கூட்டணி ஆட்சி என்று நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள்; இனி யாரும் அதைக் கேட்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.




அவர் தனது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைத்துள்ளார். தமிழக அரசு வழங்கிய ரூ.5,000 உதவித்தொகைக்குப் பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றாகத் தெரியும். மக்கள் அரசின் மீது மிகுந்த திருப்தியில் இருப்பதை இது காட்டுகிறது. அதே போல், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தெளிவான முடிவை எடுத்து அதை வெளிப்படுத்திவிட்டார்.


மேலும், திமுகவின் இந்த நிலைப்பாட்டைத் தேசிய அளவில் அக்கட்சியின் முக்கியக் கூட்டணித் தலைவரான ராகுல் காந்தியும் ஏற்றுக்கொள்வார் என்று ஆர்.எஸ். பாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் மூலம், வரும் 2026 தேர்தலிலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.இந்த அறிவிப்பு, கூட்டணி கட்சிகளிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், தேர்தல் வியூகங்களில் என்ன மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதும் வரும் நாட்களில் தெரியவரும்.


இனி யாரும் கேட் மாட்டார்கள் என ஆர்.எஸ்.பாரதி எதை வைத்து சொல்கிறார்? திமுக கூட்டணிக்குள் அப்படி என்ன தான் நடக்கிறது? ஒரு வேளை காங்கிரஸ் தரப்பை கூட்டணி ஆட்சி என்பது பற்றி பேசக் கூடாது என சொல்லி அமைதிப்படுத்தி விட்டார்களா அல்லது சமாதானப்படுத்தி விட்டார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.