சென்னை : தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப் பகிர்வு குறித்த விவாதங்கள் முடிவில்லாத பிரச்சனையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே திட்டவட்டமாக கூறி விட்டார். ஆனால் இந்த பிரச்சனை ஓயவில்லை.
சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், "வரவிருக்கும் தேர்தலில் திமுக 170 இடங்களில் போட்டியிடும்" எனத் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் சில முக்கியப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் வெற்றி பெற்றது. நாங்கள் கேட்பது நீங்கள் வெற்றி பெற்ற இடங்களை அல்ல; மாறாக திமுக தோல்வியடைந்த 40 இடங்களையே நாங்கள் கேட்கிறோம்" என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் தொகுதிப் பங்கீடு மட்டுமல்லாமல், 'அதிகாரப் பகிர்வு அவசியம்' என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். "ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை; அதனை மக்கள் தீர்மானிப்பார்கள்" என அவர் பதிவிட்டுள்ளது, வரும் தேர்தலில் காங்கிரஸ் 'கூட்டணி ஆட்சி' என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்கப் போவதை உணர்த்துகிறது.
பொதுவாக தேர்தல் சமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவது வழக்கம் தான். பிறகு அது காணாமல் போய் விடும். ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் இருக்கும் விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை உறுதியாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதிலும் தேசிய கட்சியான காங்கிரஸ் இந்த முறை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து விடாப்பிடியாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இது திமுக தலைமைக்கு ஒருவித அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பனின் '170 இடங்கள்' என்ற பேச்சுக்கும், அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக அமைந்துள்ள மாணிக்கம் தாகூரின் இந்த 'அதிகார பகிர்வு' பதிவும், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.கூட்டணிக்குள் இணக்கம் இருப்பதாகத் தலைவர்கள் கூறினாலும், அடிமட்ட அளவில் தொகுதிகளைக் கைப்பற்றுவதிலும், ஆட்சியில் பங்கு பெறுவதிலும் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவதை இச்சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
Navartri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?
Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!
நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
நட்பூ
{{comments.comment}}