கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

Jul 06, 2026,12:14 PM IST

சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துகளுக்குத் தடை விதிக்கக் கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.


"விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம்" 

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கரூருக்கு பகல் 12 மணிக்கு வருவதாகக் கூறியிருந்த விஜய், மிகத் தாமதமாக இரவு 7 மணிக்கு வந்துள்ளார். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கரூர் மக்களை சுமார் 7 மணி நேரம் விஜய் காக்க வைத்த நிலையில், அங்கு திரண்டிருந்த மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை.


இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் மற்றும் துயரங்கள் நடந்த பிறகும், பாதிக்கப்பட்ட அந்த மக்களைச் சந்திக்காமல் விஜய் நேரடியாகச் சென்னைக்குச் சென்றுவிட்டார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில், அதைக் கவனிக்காமல் முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து விஜய் குதிரை பேரங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, என்னைப் பொறுத்தவரை கரூர் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய்யும் ஒரு முக்கியக் காரணமாக இருப்பார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


நாளை முக்கிய விசாரணை!




மறுபுறம், கரூர் துயர சம்பவம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இது குறித்துக் கருத்து தெரிவிப்பது, கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையில் தேவையற்ற தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் துயரம் தொடர்பாக தவெகவினர் மற்றும் பிற தரப்பினர் கருத்துக்களைத் தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், "வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து, இந்த மனுவை நாங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.  கரூர் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்