Short Story: 10சி !
Apr 13, 2026,02:06 PM IST
கமலி அந்த பள்ளிக்கு அந்த ஆண்டுதான் பொதுமாறுதலில் மாற்றம் பெற்று வந்து சேர்ந்தாள். பள்ளியின் மூன்றாவதான ஆசிரியையான அவளுக்கு பத்தாம் வகுப்பு சி பிரிவு கொடுக்கப்பட்டது.
வாலுகள் அதிகம் நிறைந்த வகுப்பு .அதே சமயம் 35 மாணவர்களில் எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்க திணறுபவர்கள் மீதமுள்ள மாணவர்கள் அனைவருமே படிப்பில் படு சுட்டி . எப்போதுமே சத்தத்துடனேயே அந்த 10 சி காணப்படும் . கமலி மிகவும் கனிவானவள் அதே சமயம் கண்டிப்பானவளும் கூட..
படிக்கின்ற நேரத்தில் படிக்க வேண்டும் , மற்ற சமயங்களில் மிக கும்மாளம் தான் .
பதினைந்து வருடங்கள் ஆயின அவள் இப்பள்ளிக்கு வந்து .. இன்றும் அதே 10 சி தான் .. மாணவ மாணவிகள்தான் மாற்றமே தவிர வகுப்பு மாறேவே இல்லை. கமலிக்கு அடையாளமே 10 சி டீச்சர் என்றாகி விட்டது .. எந்த பழைய மாணவர்களாவது பள்ளிக்கு வந்து கமலியை விசாரிப்பதே 10 சி டீச்சர் என்றுதான் .
என்னவோ 10 சியும் கமலிக்கும் ராசியாகிப்போனது . அது மட்டுமல்ல போகும் அனைத்து வகுப்புகளும் சி தான் .
எங்காவது மாற்று பணிக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள 10 சி யை பார்த்தால் பாசம் பொங்கும் கமலிக்கு.
பள்ளியிலுள்ள எல்லா குழந்தைகளையும் தன் வகுப்பு குழந்தைகள் போலத்தான் எண்ணுவாள் என்றாலும் ,10 சி என்றால் அதீத பாசம் .
காலங்கள் பல உருண்டோடின . கமலிக்கு முன் பள்ளிக்கு வந்த மூத்த ஆசிரியர்கள் ஓய்வு பெற கமலிக்கு தற்பொழுது 10 ஏ கொடுக்கப்பட்டது . பள்ளி ஆரம்பித்த நாள், வருகை பதிவில் தன்னிச்சையாக கைகள் 10 சி என எழுதின .
"சே எனக்கூறியபடியே அதையடித்துவிட்டு 10 ஏ என எழுதினாள்.
முதல்முதலாக அவளுக்கு 10 ஏ கொடுக்கப்பட்டிருக்கின்றது. வகுப்பறைக்குள் சென்றதும் கரும்பலகையில் 10 சி என்றே எழுதியவள் , அதை அடித்துப்பின் 10 ஏ என்று எழுதினாள்.
என்ன இந்த வருடம் இப்படி எல்லாவற்றையும் அடித்து எழுதுகிறோம்?என மனதில் எண்ணியபடியே அன்றைய பொழுதை ஓட்டினாள் கமலி.
மறுநாள் வகுப்பிலிருந்து புத்தகத்தை வாங்கி வரச்சொல்வதற்காக ஒரு எட்டாம் வகுப்பு சிறுமியை அழைத்து , “ஏய் தங்கம் ,மிஸ்க்கு 10 சி யில லதா அக்காவை வரச்சொல்லு என்று சொல்லிவிட்டாள்.
பதினைந்து வருடங்களாக சொல்லி அழைத்த வகுப்பு .. இந்த வருடம் ,10 ஏ என்று சொல்ல வரவில்லை.
ஓடிவந்த எட்டாம் வகுப்பு மாணவியோ , மிஸ் அந்த கிளாஸ் ல லதான்னு யாருமே இல்லையாம் மிஸ் என்று சொன்னவுடன் , ஏன் இல்ல காலையில தான் நான் அவளைப்பார்த்தேனே .. எனச்சொல்லியவள் , சே.. என்று நாக்கை கடித்தபடி , 10 ஏ ல இருப்பா பாரு கூட்டிட்டு வா, என்றாள்.
மூன்று மாதங்கள் ஆனாலும் 10 சி மட்டுமே கமலியின் வாயில் .. 10 ஏ வரவே இல்லை ..
10 ஏ குழந்தைகள் அனைவரும் .. “மிஸ் இது 10 ஏ மிஸ் . நம்ம கிளாஸ் 10 ஏ மிஸ் நீங்கமட்டும் 10 சி 10 சி ன்னு சொல்றீங்க “ என்று பல முறை சிரித்து கொண்டு. ,பல முறை கத்திக்கொண்டு பல முறை கோபத்துடன் கூட கேட்பார்கள் .
ஆனால் கமலி மட்டும் சிரித்தபடியே அவர்களை கடந்து விடுவாள் .. 10 சி வகுப்பை நடக்கும் பொழுது ஒரு பெருமூச்சு விடுவாள் .எதையோ பறி கொடுத்த பதபதைப்பு அவளிடம். மேலும் அவளிடமிடமிருந்த எதையோ பறித்துவிட்ட உணர்வு அவளுக்குள் அடிக்கடி வந்து செல்லும்.
அந்த பள்ளியில் அவள் வந்த பொழுது தமிழ் வழி மட்டும்தான் இருந்தது.. ஆங்கில வழி ஆரம்பித்த பொழுது , 10 ஏ பிரிவு மட்டும் ஆங்கில வழி மற்ற இரண்டு வகுப்புகளும் தமிழ் வழி ..
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான் அவள் பள்ளியில் ஆங்கில மோகம் அதிகமாக இருக்கிறது . நிறைய மாணவர்கள் ஆங்கில வழியில் பயில ஆரம்பித்தவுடன் . மூன்று பிரிவுகள் , 10 ஏ 10 பி 10 சி மூன்றும் ஆங்கில வழி .. 10 டி மட்டும் தமிழ் வழியாயிற்று..எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆங்கில பிரிவு கமலிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது .. அதுவல்ல விஷயம் .. ஆங்கில வழியோ அல்லது தமிழ் வழியோ , கமலி 10 சி க்கு செல்லும் ஆசிரியர் அவ்வளவே..
கமலியும் 10 சியும் இணைபிரியாத பந்தத்தால் . வேறு வகுப்பு அவளுடன் இணையாகவில்லை . மனம் முழுதும் 10 சி , 10 சி என்றே ஓட ..
தலைமை ஆசிரியரிடம் என் வகுப்பு 10 சியாக இருக்கலாமா? மாணவர்கள் அதே ஆனால் வகுப்பு 10 சி என மாற்றிக்கொள்ளவா? என கேட்க எத்தனித்தவள் .
தலைமை ஆசிரியர் அறைக்கு முன் ஒரு பெற்றோர் கூக்குரலிட்டுக்கொண்இருந்தார்..
என்னவாக இருக்கும்? என எண்ணியபடியே ஆசிரியர்கள் அறையிலின்று வெளியே வந்த கமலி அந்த உரையாடலை கேட்க ஆரம்பித்தாள்,
வந்தவரோ , என் பையன் ஆறாம் வகுப்பு சி யில போட்டிருக்கீங்க ஏ ல போடுங்க என்று பெரும் சத்தம் போட்டுகொண்டிருக்க .. தலைமையாசிரியரோ, ஏன் சார் 6 சிக்கு என்ன ? எனக்கேட்க வந்தவரோ , ஏ கிளாஸ் தான் நல்லாப்படிக்கிற பசங்க நல்லா சொல்லித்தர டீச்சர் இருப்பாங்க எனச் சொல்ல .
அப்படியெல்லாம் இல்லை சார் நிர்வாக காரணத்தால தான் அப்படி பிரிச்சிருக்கோம்.. செக்ஸன் ல என்ன இருக்கு. எல்லாம் ஒரே மாதிரியான வகுப்புதான் எல்லாருக்கும் ஒரே மாதிரி கல்விதான் எனப்பேசிக்கொண்டிருந்தார் .
கமலியை பார்த்ததும் , “நீங்க கொஞ்சம் சொல்லி புரிய வையுங்கமா” என்றார்.
அவர் சொன்னதை கேட்ட கமலிக்கு நடு மண்டையில் நச்சுன்னு யாரோ அடித்தது போல இருந்தது ..
சொல்லவேண்டியது பெற்றோருக்கல்ல தன் மனதிற்கும் சேர்த்துதான் எனப்புரிந்தது கமலிக்கு ..
வகுப்பு என்னவாக இருந்தால் என்ன ? மாணவர்கள் மாணவர்கள் தான் .. அதுவும் என் மாணவர்கள் என்று சற்று செருக்குடன் 10 ஏ வை நோக்கி பயணித்தாள் கமலி.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர்( ஆங்கிலம்), அரசு மேநிலைப்பள்ளி கண்டிகை , செங்கல்பட்டு மாவட்டம்)