Tamil Short Story by Ananthi: காகிதப் பூக்கள்
Apr 20, 2026,05:02 PM IST
- ச. ஆனந்தி
மலருக்கு எப்போதுமே பூக்கள் மிக மிக பிடிக்கும்.. அவளுக்கு பிடிக்கப்போவதுப்தெரிந்துதானோ என்னவோ அவளுக்கு மலர் என்ற பெயர் வைத்தார்கள்.
எப்படி இருந்தாலும் சரி மலருக்கும் எந்த மலரானாலும் கொள்ளைப்பிரியம் .
அவளுக்கு ரசிக்க மட்டும்தான் பிடிக்கும். அதை பறித்து தலையில் சூடிக்கொள்ள பிடிக்கவே பிடிக்காது.
மலருக்கும் உயிர் உண்டு , என்பதே இந்த மலரின் கொள்கை.
இயற்கையின் படைப்பு அப்பப்பா என்ன விந்தை?
குட்டி குட்டி மலர்கள் .பெரிய மலர்கள். அடர் நிற மலர்கள் , கொடியில் மலரும் மலர்கள் , செடி மலர்கள் . புதர் மலர்கள் .. முட்களிடையே மலரும் மலர்கள் அப்பப்பா .. அடுக்கிக்கொண்டே போகலாம்.
மலர் எங்கேயாவது செல்ல நேரிடின் அவள் வீட்டிற்கு வாங்கி வருவது மலர் செடிகள்தான்.
அதை பார்ப்பதில் அவளுக்கு அலாதியான ஆனந்தம்.
ஒரு முறை அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர் ஒருவர் அவள் வைத்திருந்த மலரை பறித்து தலையில் சூடினார் என்பதனால் பயங்கர கோபம் கொண்டு அவரிடம் சண்டையும் போட்டாள் .
வந்தவரோ, “அதிசயமா இவதான் பூச்செடி வச்சிருக்கா போடி .. பூவை தலையில் வைத்திருந்தா தான் பூக்கே அழகு “ எனச் சிடுசிடுத்தார்.
அதையெல்லாம் மலர் பொருட்படுத்தவே இல்லை.
“இங்க பாருங்க நீங்க பூவை எங்கேயாவது வாங்கி வையுங்க .. ஆனா என் தோட்டத்துல மட்டும் பறிக்காதீங்க”, என அழுத்தம்திருத்தமாய் கூறிச்சென்றாள்.இதனால் உறவு முறிந்தால் கூட அதைப் பற்றி அவளுக்கு கவலை இல்லை.
மலருக்கு மிக மிக பிரியமானது போகைன்விலா எனச்சொல்லக்கூடிய காகிதப்பூக்கள்.
அப்பூக்களின் மீது அவளுக்கு அத்தனை மோகம் .
அப்பூக்களை பற்றி அவள் அதிகமாக அறிந்தும் வைத்திருந்தாள்.
பிங்க் கலர் . மஞ்சள், ரோஸ் ஆரஞ்சு கலர், வைலட் கலர் , வெள்ளை என பல நிறங்களில் அவைகளை பற்றிய விவரம் அவளுக்குத் தெரியும் .
பல நாட்களாக அதை வளர்க்கவேண்டும் என்ற கனவு அவளுக்கு.
பெரிய பெரிய பங்களாவின் முன் அடையாளமாக இந்த போகைன்விலா பூக்கள் காணப்படுவதை அவள் கவனித்துள்ளாள்.
மலர் வீடு அப்படி ஒன்றும் பெரிய பங்களா அல்ல ..
சின்ன வீடு .. வீட்டிற்கு பின்புறம் ஒரு சிறிய மலர் தோட்டம் .
சமீபத்தில்தான் அவளின் தோட்டத்திலிருந்த இரண்டடுக்கு மல்லி மலர்கள் மர ஆரம்பித்துள்ளன.
அந்த மலரின் நறுமணம்,அவ்வழியே போவோர் வருவோரை ஒரு நிமிடம் நிற்க வைக்கும்.
பல நறுமணங்கள் வீசக்கூடிய மலர்கள் இருந்தாலும் . அந்த காகித பூக்களிலேயே கண்ணாக இருந்தாள்.
வீட்டில் உள்ளவர்களோ , அவளின் உணர்வுக்கு மதிப்பளிக்கவேயில்லை .
கணவனோ, அந்த பூ எதுக்கு ? அது வாசனையே தராது .. பறித்தாலோ கசங்கிவிடும். பூத்து கீழே விழுந்தால் , குப்பைதான் ,”என்றான்.
அவளின் மாமியரோ, “ அந்த பூவை பறிச்சு சாமிக்குதான் வைக்க முடியுமா? எதுக்கு அது ? என்றாள்.
மலரின் மகள் செம்பருத்தி மட்டும் அம்மா பெண் .. அவள்தான் ,ஆமாம் அம்மா, போகைன்விலா பூ வாங்கி வைக்கலாம் . அது பூத்துகுலுங்குவதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? என்றாள்.
இந்த வருடம் மலரின் பிறந்தநாளுக்கு அப்பாவிடம் அடம்பிடித்து இரண்டு கலர்களில் போகைன்விலா வாங்கி அம்மாவிற்கு சர்பிரைஸாக பரிசளித்தாள்.
அதை பார்த்த மலரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
மகளை கட்டியணைத்தபடியே .. “தாங்க்ஸ் செல்லம் “,என்று கூறி முத்த மழை பொழிந்தாள்.
அதை உடனே தோட்டத்தில் நடவும் செய்தாள்.
மூன்று மாதங்களுக்கு பிறகு அதன் இலைகள் கலர் மாறுவதை கண்ட மலரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை .
அனைவரிடம் கூறிய வண்ணமாக இருந்தாள் . வீட்டில் உள்ளவர்களையும் வீட்டிற்கு வருபவர்களையும் கைப்பிடித்து தோட்டத்திற்கு கூட்டிச்சென்று காகிதப்பூக்களை காண்பிப்பாள்.
மூன்று மாதங்களில் சரசரவென்றும்,நெடுநெடுவென உயரமாக வளர்ந்து கம்பீரமாக காட்சியளித்தது. மலர் வளர்த்த செடிகளில் ஒன்று மட்டுமே வளர்ந்திருந்தது. மற்றொன்று துளிர் கூட விடவில்லை வைத்தது வைத்தப்படியே இருந்தது.
ஆனால் என்ன மற்றொரு செடி பூக்க ஆரம்பித்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி மலருக்கு.
காகித பூக்க்களின் இலைகள் தான் கலராக மாறுகின்றன அதிலிருந்து சிறிய வெள்ளை பூக்கள்தான் அவற்றின் மலர்கள் என படித்திருந்த மலர் அதை காணும் அனைவரிடமும் கூறுவாள். மேலும் அதிலேயே பல வகைகளும் இருப்பதையும் கூறி பூரிப்படைவாள்.
ஆறு மாதத்தில் பூக்கள் பூத்து குலுங்கி அவள் வீட்டிற்கே அழகு சேர்த்தார் போல் அவள் மனம் குதூகலித்தது. மகளிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதிலிருந்து , மலரின் மாமியார் தினமும் புலம்பிக்கொண்டிருந்தாள்.
“கல்யாணம் ஆனா செம்பருத்தியும் மாப்பிள்ளையும் வந்தா எங்க தங்குவாங்க ? இன்னும் ஒரு ரூம் போட்டாதான் சரியாக இருக்கும் ,”என புலம்ப மலரின் கணவனும் அதை ஆமோதிப்பவன் போல தலையாட்டியது மட்டுமல்லாது , மறுநாளே ஒரு இன்ஜினியரை கூட்டிவந்தான் ..
அளவுகள் எடுக்கப்பட்டன , எடுக்கப்பட்ட இடமோ மலரின் கண்ணான தோட்டம். என்ன செய்வது , ரூம் தேவைதானே? மனதை கல்லாக்கிக்கொண்டாள் மலர் .
அவளின் தோட்டம் சிதைக்கப்பட்டது .. காகிதப்பூ செடியும் அகற்றப்பட்டது .. காகிதப்பூ பறித்தால் வாடுவதை போல் மலரின் மனதும் வாடியது.
கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது . செம்பருத்தியும் மாமியார் வீட்டிற்கு சீரும் சிறப்புமாக அனுப்பி வைக்கப்பட்டாள். நாளை பெண் மாப்பிள்ளை இருவரும் மறு வீடு வருகிறார்கள். தோட்டம் இருந்த இடத்தில்தான் செம்பருத்தியின் ரூம் அமையப்பெற்றிருந்தது.
அம்மாவின் மனம் வாட்டத்துடன் தான் தன் ரூம் கட்டப்பட்டது என்பதை செம்பருத்தி நன்கறிந்தவள். மறு வீடு வரும் மகளை எதிர்ப்பார்த்து காத்திருந்த மலருக்கு பயங்கர அதிர்ச்சி. செம்பருத்தி கணவருடன் கூடவே ஒரு வேன் நிறைய பூச்செடி தொட்டிகள் .
செம்பருத்தியின் கணவன் மலரை பார்த்து, “அத்தை உங்க மக என்கிட்ட கல்யாண பரிசா முதல்ல எதை கேட்டா தெரியுமா? எங்க வீட்ல ஒரு மாடித்தோட்டம் அமைச்சிதாங்கன்னுதான்.
என் பிரண்டு இதுல ரொம்ப கை தேர்ந்தவன் “என்று கூறிக்கொண்டே செடித்தொட்டிகளை இறக்க ஆரம்பித்தான். அதிலிருந்த காகிதப்பூ செடி ஒன்று அவளை பார்த்து கண்ணடித்தது. மலரின் முகமும் மனமும் அக்காகித மலர்கள் போலவே அடர்த்தியாக மகிழ்ச்சியாக இருந்தது.