சேலம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மாசி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

Swarnalakshmi
Jan 28, 2026,11:37 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


2026 ஆம் ஆண்டிற்கான சேலம் மாநகரில் கடைவீதியில்  அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் -"மாசி மகா திருவிழா"விற்கான கொடியேற்றம் ஜனவரி 27, 2026 செவ்வாய்க்கிழமை,தை மாதம் 13 ஆம் நாள்  அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாசி திருவிழா மயான கொள்ளை திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.


அங்காள பரமேஸ்வரி- (பெரியாண்டிச்சி , பெத்த வார் அம்மா) தமிழ்நாட்டில் பரவலாக பல சமுதாயத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறார். இந்த அம்மன் பரவலாக வழிபடப்படும் சக்தி வாய்ந்த குலதெய்வம் மற்றும் காவல் தெய்வம் ஆகும்.பார்வதி தேவியின் அம்சமான இவர் தீமைகளை அழித்து பக்தர்களை காக்கும் கருணைமிக்க அம்மனாக, குறிப்பாக மாசி மாதம் நடைபெறும் மயான கொள்ளை, ஊஞ்சல் சேவை போன்ற சிறப்பு வழிபாடுகளுடன் நெருப்பு மற்றும் தீயுடன் தொடர்புடையவராக  வணங்கப்படுகிறார்.


அம்மன் வேறு பெயர்கள்:




பார்வதி தேவியின் ஒரு அம்சமான அங்காள பரமேஸ்வரி - அங்காளம்மன்,அங்காள தேவி,அங்காள ஈஸ்வரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி, தாண்டேசுவரி,பேச்சியாயி என பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்.இவர் சப்த கன்னியரில் ஒருவரின் அம்சமாக கருதப்படுகிறாள்.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கும் மயான கொள்ளை திருவிழா மாசி மாதம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.


அங்காள பரமேஸ்வரி அம்மனை குலதெய்வமாக வணங்குபவர்களுக்கு  எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் உடனடி தீர்வு பெற முடியும் என்பது ஐதீகம். காவல் தெய்வமான இவர் பல இடங்களில் சப்த கன்னியரில் ஒருவராகவும், மயான காளியாகவும் வழிபடப்படுகிறார். நெருப்பு, தீப்பந்தம், பம்பை, புற்று வழிபாடு ஆகியவை இவரது சந்நிதிகளில் முக்கிய அம்சங்கள் ஆகும். இம்முறையான வழிபாடு எதிர்மறை ஆற்றலை நீக்கி பக்தர்களை பாதுகாக்கும் தன்மையை குறிக்கிறது.


தை மாதத்தில் மாவிளக்கு ஏற்றி அங்காள அம்மனை வழிபடுவது சிறப்பு. அமாவாசை, பௌர்ணமி பூஜைகள் இக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சேலம் டவுன் தேர் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி மகா மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 


அங்காள பரமேஸ்வரி வழிபாடு பார்வதி தேவியின் உக்கிரமான வடிவம் அங்காளம்மனை வழிபடும் முறையாகும். இந்த அம்மனை வழிபாடுவதனால் அச்சம் நீங்கி,குறைகள் நீங்கி, குறிப்பாக அமாவாசை, செவ்வாய்,வெள்ளி போன்ற நாட்களில் எலுமிச்சை மாலை, குங்குமம்,மஞ்சள், விளக்குகள்,புற்று மண் பிரசாதம் மற்றும் அங்க பிரதட்சணம் போன்ற வழிபாடுகள் செய்து வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுவதன் மூலம் உடல்நலம்,குழந்தை பாக்கியம்,வெற்றி ஆகியவை அடைவதாக நம்பப்படுகிறது. அனைவரும் அங்காள பரமேஸ்வரியின் அருள் கிடைக்க பெறுவோமாக.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.