சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழா

Swarnalakshmi
Feb 23, 2026,12:51 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாங்கனி நகர் சேலம் மாநகரில் (மங்களபுரி) செவ்வாய்பேட்டை என்று அழைக்கப்படும் செவ்வாய் நகர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் 22. 2.2026 மாசி பத்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) திருக்குட  முழக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நன்னீராட்டு திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பிப்ரவரி 22ஆம் தேதி காலை 8 :15 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் கருவறை கோபுர திருக்குடமுழங்கு நன்னீராட்டு விழா கோலாகலமாகவும், சிறப்பாகவும்  நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது கும்பாபிஷேக தீர்த்தம்  ட்ரோன் (drone) மூலம் தெளிக்கப்பட்டது.


காலை 8 :45 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் திருமேனிக்கும், பரிவார தேவதைகள் மற்றும் தேரடி செல்வ விநாயகர்  சன்னதிக்கும், திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பேரொளி வழிபாடு, திருவமுது வழங்குதல், தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.




காலை 11 :00மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.  காலை 11:15க்கு மகா அன்னதானம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. 


மாசி 11ஆம் தேதி 23.2.2026 திங்கட்கிழமை முதல் மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறும். 


கேட்ட வரம் அருள் பாலிக்கும் செவ்வாய்பேட்டை  மாரியம்மன் திருத்தல வரலாறு :


செவ்வாய்பேட்டை என்று அழைக்கப்படும் செவ்வாய் நகர் பகுதியில் கி.பி. 17 92 இல் ஆங்கிலேயர் வசம் இருந்து வியாபாரம் தொழில்களால் சிறப்பு பெற்ற ஊராக இருந்தது. சந்தைக்கு  சென்று வரும் வழியில் பக்தர் ஒருவருக்கு ஒரு குழவி கல் செல்லும் பாதையில் தென்பட்டது.அந்தப் பாதை வழியாக சென்றவர்களுக்கு இடையூறாக இருந்த அந்த குழுவில் கல்லை வேலியின்  ஓரமாக நகர்த்தி வைத்தனர். மறுநாள் மீண்டும் அந்தக் குழவி கல் அதே இடத்தில் தென்பட மீண்டும்  ஓரமாக நகர்த்தி வைத்தனர். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களும் இந்த நிகழ்வு நடைபெற்றது. 


அன்று இரவு தெய்வசிந்தனை மிக்க  மூதாட்டியின்  கனவில் அந்தக் குழவி கல் தான்  மாரியம்மன் என்றும் இந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று அன்னை மாரியம்மன் தெரிவிக்க,மூதாட்டி மூலம் இந்த அருள்வாக்கை பலர் அறிந்தனர்.


அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த சுந்தரம் செட்டி  என்பவரும் அவருடன் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் விஷயம் அறிந்து அங்கு ஸ்ரீ  மாரியம்மனை  பிரதிஷ்டை செய்தனர். இதனை அறிந்த அரசாங்கம் சுந்தரம் செட்டி  மீது வழக்கு தொடுத்தது. அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்பொழுது அம்பிகை மாரியம்மன் சிறு பெண் உருவம் கொண்டு நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று சாட்சி அளித்தாள். சுந்தரம் செட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். 


இந்த வகையில் மங்களாம்பிகை மாரியம்மன் செவ்வை மாநகரில் குடிகொண்டு எல்லோருக்கும் இன்றும் அருள் பாலிக்கிறாள். ஆடி மாதம் மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.


ஓம் சக்தி! பராசக்தி!


அருள்மிகு மாரியம்மன் ஸ்லோகம்:

அருள்மிகு மாரியம்மன் துணை 

நெருப்பேந்தி கசப்பணிந்த நீரே கூடி நெடு வினையை கொடு நோயை நீக்குவாளை 

கருப்பேந்தும் உலகுய்ய  கருணை வார்க்கும் கண் கண்ட தெய்வத்தை கந்தன் முன்னே 

மருப்பேந்தும் கரத்தாளை மகவாய் கண்ட மங்கள  மாபுரத்தாளை மாரி தன்னை 

அரும்பேந்தி மலர் ஏந்தி அருளேந்தி நிற்கும் அவள் அடியை அனுதினம் யாம் பணிகுவோமே.


எல்லாம் வல்ல பரம்பொருள் காணும் போதிலும்  நீக்க மற நிறைந்து அகண்ட ஜோதி பிரகாசமாய், இப் பூவுலகில்  தன்னை வழிபட்டவர்களுக்கு அருள்மிகு மாரியம்மன், நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாய் இச்சா, ஞானம்,கிரியை ஆகிய மூன்று சக்தியின் வடிவமாய் விளங்கும் ஆதிபராசக்தியை வழிபட்டு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோமாக.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.