சமையல் With ஸ்வர்ணா- தீபாவளி ஸ்பெஷல் - பாரம்பரிய பலகாரம் சாஃப்ட்டான அதிரசம்!

Swarnalakshmi
Nov 03, 2026,11:25 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


என்னதான் ஸ்வீட் கடைகளில் விதவிதமான பலகாரங்கள் வாங்கி சாப்பிட்டாலும் நாமே நமக்குத் தெரிந்த வகையில் ஸ்வீட் செய்து சாப்பிடும் போது தனி குஷி தான் இல்லையா?


சில பல டிப்ஸ்களை முறையாக கடைபிடித்தால், வெல்லப்பாகு முறையாக காய்ச்சினாலே போதும், மிக்ஸியில் அரைத்து மிகவும் சுவையான சாஃப்ட்டான தீபாவளி பலகாரம் அதிரசம் செய்யலாம். வீடுகளில் பலகாரம் செய்தாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அலாதி சந்தோஷம்  தானே .


அதிரசம் செய்ய மூன்றே பொருள் போதும்.

 

முதலில் கிச்சனுக்குள் போகலாம் வாங்க பாஸ்..


தேவையான பொருட்கள்:




1. கார் பச்சரிசி -1/2 கிலோ.

2. வெல்லம்  - 350 கிராம்.3.  கடலை எண்ணெய்-1/2 லிட்டர்.


செய்முறை :


1. முதலில் கார் பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பிறகு தண்ணீர் நன்றாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3. ஈரப்பதம் சிறிது காய்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் மாற்றி நைசாக அரைக்கவும்.

4. மாவை சல்லடையில் சலித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.


அடுத்து வெல்லப்பாகு  காய்ச்சப் போகலாமா..


5. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாக பொடி செய்து கரைத்து பாகு காய்ச்ச வேண்டும்.

6. பாகு நன்றாக கொதி வந்தவுடன் கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன், கரண்டியில் எடுத்து கம்பி பதம் வந்தவுடன் பாகு ரெடி ஆகிவிடும்.


இன்னொரு முறை :


7. ஒரு குழியான தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் காய்ச்சிய பாகை சிறிது ஊற்றவும், பாகு கரையாமல் உருண்டை பிடிக்கும் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும். இந்தப் பாகுபதம் சரியாக வந்தால் அதிரசம் உடையாமல் வரும்.

8. வெல்லப்பாகை ஒரு வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.


குறிப்பு: இதில் ஏதாவது அழுக்கு, மண் இருந்தால் வடிகட்டி எடுப்பது சிறந்தது.




9. வடிகட்டிய வெல்லப்பாகை அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் கட்டிப்படாமல் இருக்க கைவிடாமல் கலக்க வேண்டும்.

10. பிறகு சூடு  சிறிது பொறுக்கும் அளவு இருப்பின், கைகளால் நன்றாகப் பிசையவும்.

11.  அந்த மாவின் மீது 1/2 ஸ்பூன் நெய் தடவி இரண்டு நாட்கள்  மூடி வைக்கவும். 


குறிப்பு: நெய் தடவி வைக்க மாவின் மேல்புறம் காயாமல் இருக்கும்.


12. இரண்டு நாட்கள் மாவு வெல்லப் பாகில்  நன்றாக ஊறிய பிறகு மாவை நன்றாக பிசையவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர்  தெளித்து பிசையவும். ( நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது ) . குறிப்பு:மாவு மிகவும் தண்ணீர் பதமாக  இருந்தால் சிறிது கோதுமை மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம்.


13. பிறகு சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி ஒரு வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி மாவு உருண்டைகளை தட்டவும்.

14. அடி கனமான வாணலியில்  எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறியவுடன் தட்டி வைத்த மாவு ஒவ்வொன்றாக போடவும்.

15. அடிப்பக்கம் பொன்னிறமாக மாறியவுடன் ஜல்லி கரண்டியால் திருப்பி போடவும்.

16.   எண்ணெய் பபுள்ஸ் அடங்கியவுடன் உடனே அதிரசத்தை எடுக்கவும்.

17. அதிரசம் உப்பி வரும், உடனே ஜல்லி கரண்டியில் எடுத்து அதிரசத்தை இன்னொரு கரண்டி வைத்து லேசாக அழுத்தினால்   எண்ணெய் வடிந்து வரும். சரியான பதத்தில் அதிரசம் ரெடி.

18. உடனே ஒரு பரவலான பெரிய தட்டில் ஒவ்வொன்றாக வைக்கவும்.

19. உருண்டைகளை தட்டிய பிறகு நடுவில் ஓட்டை போட்டும் சுட்டு எடுக்கலாம்.

20. நன்றாக சூடு ஆறிய பிறகு ஒரு ஏர் டைட் (air tight) எவர்சில்வர் டப்பாவில் வைக்கவும்.


என்ன பாஸ்... இவ்வளவு பெரிய செய்முறையா! என்று வியப்பாக இருக்கிறதா... ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி செய்து பாருங்க பாஸ்.. நிறைய வீடுகளில் அதிரசம் விரும்பிகள்  நிறைய பேர் உள்ளனர். இந்த செய்முறை பிகினர்ஸ்க்கும், தனிக்குடித்தனம் இருப்பவர்களுக்கும்  ஈஸியான டிப்ஸ் ஆக இருக்கும்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான, ருசியான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழ்  "சமையல் வித் ஸ்வர்ணா". எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.