சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!

Su.tha Arivalagan
Nov 20, 2026,12:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன பொரியல் செய்து லஞ்ச் பாக்ஸில் பேக் செய்வது என்பது ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு பெரிய டாஸ்க்காக இருக்கும் இல்லையா பாஸ்?


அதற்கு தான் ஒரு ஈஸியான  சட்டென அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு டேஸ்டியான சேப்பங்கிழங்கு டொமேட்டோ பெப்பர் ஃப்ரை செய்யலாமா? 


சேப்பங்கிழங்கு அதிக நார்ச்சத்தும், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள்  - பி6, சி, இ   நிறைந்த ஆரோக்கியமான கிழங்கு வகை ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்துவும். ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. அதற்கு முதலில் வாங்க பாஸ் கிச்சனுக்குள் போகலாம்...


சேப்பங்கிழங்கு  டொமேட்டோ பெப்பர்  ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள் :




1. சேப்பங்கிழங்கு - 5 


குக்கரில்  அரை ஸ்பூன் கல் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைக்கவும். சூடு ஆறியவுடன் தோலை உரித்து  வட்ட வடிவத்தில் கட் செய்யவும். இதனை ஒரு பவுலில் வைத்துக் கொள்ளவும்.


2. பெரிய வெங்காயம் 2 பொடியாக கட் செய்யவும்.

3. தக்காளி 1  பொடியாக கட் செய்யவும்.

4. மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் தலா  1/4 ஸ்பூன்.

5. கறி மசாலா தூள் 1/2 ஸ்பூன்.

6. மிளகு தூள் ஒரு ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப)

7. சீரகம்,சோம்பு தலா 1/4 ஸ்பூன்.

8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்.

9. தாளிக்க : எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை.

10. உப்பு தேவைக்கு ஏற்ப.


 செய்முறை:


1. ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சீரகம், சோம்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


2. பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

  

3. பிறகு தக்காளி,கறி மசாலா தூள், மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 


4. கட் செய்து வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து அதன் மீது மிளகுத்தூள் தூவி நன்றாக பிரட்டி எடுக்கவும்.


5. அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவவும்.


அவ்வளவுதாங்க.. ஒரு டேஸ்டியான சேப்பங்கிழங்கு டொமேட்டோ பெப்பர் ஃப்ரை ரெடி. சாப்பிட வாங்க பாஸ்..


லெமன் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் இவற்றிற்கு சைட் டிஷ் ஆக வைத்து ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்க பாஸ் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் சூப்பர் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி இது.


அதை விடுங்க, அப்படி சேப்பங்கிழங்கில் என்ன நன்மை இருக்கிறது? பார்ப்போமா...




1. சேப்பங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் நீங்கி குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.


2. இதில் உள்ள பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.


3. கொலஸ்ட்ரால் குறைக்கிறது. கொழுப்பு சத்து மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதனால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைக்க உதவுகிறது.


4. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி கண்பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.


5.  இதில் உள்ள ஃப்போலேட்(folate) சத்து கர்ப்பிணி பெண்கள்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


6. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது ஒரு மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகையாக இருப்பினும் இதில் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்கள் உள்ளது. அவை நார்ச்சத்துக்கள் மற்றும் எதிர்ப்பு திறன் கொண்ட மாவுச்சத்து ஆகும். 


இதில் நார் சத்துக்கள் ஜீரணிக்க முடியாத ஒரு கார்போஹைட்ரேட் என்பதால் இது எளிதில் உறிஞ்சப்படாது. எனவே இது ரத்த சர்க்கரை அளவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

 எனவே,சர்க்கரை நோயாளிகளும் அளவாக எடுத்துக் கொள்ளலாம்.


பிறகு என்ன பாஸ்... சேப்பங்கிழங்கு டொமேட்டோ பெப்பர் ஃப்ரை ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாமே...


மேலும் இது போன்ற டேஸ்டியான, ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழ் - சமையல் வித் ஸ்வர்ணா. எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.