சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
- ஸ்வர்ணலட்சுமி
பாஸ்மதி ரைஸ்ல முட்டை தம் பிரியாணி செஞ்சு இன்னிக்கு சாப்பிடப் போறோம் பிரண்ட்ஸ். இன்னிக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதுதான்.
பிரியாணி என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தானே. 'பிரியாணி 'என்ற சொல் கேட்டாலே அதன் வாசனை மூக்கிலும், ருசி நாக்கிலும் ஒட்டிக்கொண்டு, மனதை ஈர்க்கும் அளவிற்கு அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த உணவு 'பிரியாணி'.
விலை உயர்ந்த உணவகங்களில் கிடைக்கும் பிரியாணியில் இருந்து சாலை ஓர கடைகளில் கிடைக்கும் பிரியாணி வரை மக்களை மயக்காத பிரியாணியே இல்லை என்று கூறலாம்.
'பிரியாணி' என்னும் சொல் எப்படி வந்தது பற்றி தெரிந்து கொள்ளலாமா?
'பெரியன் ' (Berian) எனும் சொல் மூலம் பெர்சிய மொழியிலிருந்து பிரியாணி என்னும் சொல் வந்தது. அப்படி என்றால் 'சமைப்பதற்கு முன் வறுப்பது' என்று பொருள். பாரசீக மொழியில் 'பிரிஞ்சி 'என்றால் 'அரிசி' என்று பொருள்படுகிறது. இதிலிருந்து பிரியாணி என்ற பெயர் உருவானதாகவும் கூறப்படுகிறது.
பிரியாணி சமைக்கும் முறை முதன் முதலில் பாரசீகத்தில் (இன்றைய ஈரான்) தோன்றி பின்னர் மத்திய ஆசியா மற்றும் வணிகர்கள் வழியாக இந்தியாவுக்கு வந்தது என்று கூறப்படுகிறது. மேலும் சங்ககாலத்தில் இறைச்சியும், அரிசியும் சேர்ந்து சமைக்கப்படும் உணவுக்கு "ஊன் சோறு" என்ற பெயரும் தமிழ் வழக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரியாணி பெயர் காரணம் பற்றி தெரிந்து கொண்டோமா! வாங்க ஃபிரண்ட்ஸ் கிச்சனுக்குள் போகலாம். பாஸ்மதி ரைஸ்-ல முட்டை தம் பிரியாணி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி அரிசி - 1 கப்
2. பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஏலக்காய்- தலா 2 .
3. பெரிய வெங்காயம் 2 நீளவாக்கில் கட் செய்யவும்.
4. இஞ்சி,பூண்டு விழுது- 2 ஸ்பூன்.
5. சோம்பு - 1/2 ஸ்பூன்.
6. சமையல் எண்ணெய் ஒரு குழி கரண்டி.
7. தக்காளி 1 பொடியாக நறுக்கவும்.
8. புதினா, மல்லித்தழை ஒரு கைப்பிடி.
9. நெய் -1 ஸ்பூன்.
10. ஷாஜீரா- ¼ ஸ்பூன்.
11. காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்.
12. பச்சை மிளகாய் -2 ( காரம் தேவைக்கு ஏற்ப)
13. உப்பு தேவையான அளவு.
14. மல்லித்தூள் 1 ஸ்பூன்.
செய்முறை:
முட்டை 4 வேக வைத்து ஓட்டை உரித்து, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை கழுவி நெய் விட்டு லேசாக வறுக்கவும். அது தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் நன்றாக வதக்கி பிரவுன் கலர் ஆனவுடன் தனியாக எடுத்து ஒரு பிளேட்டில் வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு,பிரிஞ்சி, இலை, ஏலக்காய் சோம்பு, ஷாஜீரா ( சிறிய சீரகம்), இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு புதினா இலைகள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் 2, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சத்தூள்,உப்பு, வறுத்த பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பாஸ்மதி அரிசி அளந்த கப்பில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். குறிப்பு:உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதி வந்தவுடன் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
குக்கர் மூடி போட்டு ஒரு விசில் விடவும். புதிய அரிசியாக இருந்தால் 1 விசில் பழைய அரிசிக்கு 2 விசில் விடவும். விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். அடி கனமான தோசை கல்லை சூடு ஏற்றவும். அடுப்பை அணைத்து பிரியாணி உள்ள குக்கரை தோசை கல் மீது வைத்து தம் வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் குக்கரை திறக்கவும். அடடா கமகமவென, உதிரி உதிரியாக பிரியாணி ரெடி. கடைசியாக மல்லி தழை தூவவும்
வேக வைத்த மசாலா முட்டையுடன் சூடான பிரியாணி வைத்து சாப்பிட பலே ருசியாக இருக்கும். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப டேஸ்டியா இருக்கும்.
மேலும் இது போன்ற ருசியான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் "சமையல் வித் ஸ்வர்ணா" தென் தமிழ் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.