கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

Swarnalakshmi
Oct 06, 2026,03:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சாண்ட்விச் ஜெனரேஷன்.. 'அப்படியும் சிலர் இப்படியும் சிலர்.. எனும் தலைப்பில் சில குடும்பங்களில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், சில நிகழ்வுகளை நாம பார்க்கப் போகிறோம்.


சரி, முதலில் சாண்ட்விச் ஜெனரேஷன் ( தலைமுறை) என்றால் என்ன?


"சாண்ட்விச் ஜெனரேஷன்" ஒரு சுவாரஸ்யமான தலைமுறை ஆகும்.


இந்த அற்புதமான தலைமுறையினரை சார்ந்த வயதான பெற்றோர்களையும், மாமனார், மாமியார் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களையும், தங்களை சார்ந்து உள்ள குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் நடுத்தர வயதுடைய  30+, 40+, 50+, இந்த வயதில்  இருப்பவர்களை குறிக்கும் ஒரு சொல்தான் இந்த 'சாண்ட்விச் தலைமுறை'.

 

எவ்வாறு இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவில் வைக்கப்படும் காய்கறிகளைப் போல அந்தப் பக்கமும் போக முடியாமல் இந்தப் பக்கமும் போக முடியாமல் நடுவில் மாட்டிக் கொண்டிருக்குமோ அதுபோலத்தான் இந்த சாண்ட்விச் தலைமுறையினர்  இரண்டு தலைமுறைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பதனால் இப்பெயர் பெற்றது. நிறைய குடும்பங்களில் இந்த சாண்ட்விச் தலைமுறையினர் நிறைய விஷயங்களை தனியே நின்று கையாளுகின்றனர்.


யார் இந்த சாண்ட்விச் தலைமுறை எனும்  சொல்லை  அறிமுகப்படுத்தினார்?




1981 ஆம் ஆண்டு டோரதி  மில்லர் என்னும் எலைன் ப்ரோடி என்ற சமூகப் பணியாளர்களால் இந்த சாண்ட்விச் (தலைமுறை) ஜெனரேஷன் என்னும் சொல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.


தற்போது நம் கதையை பார்ப்போம்


ஒரு சுவாரஸ்யமான கெமிஸ்ட்ரி டீச்சர். அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் தான் இந்த பாகம் -1.


ஜெலினா டீச்சர் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் ஒரு தனியார் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு கெமிஸ்ட்ரி டீச்சராக உள்ளார். அவருக்கு வயதான அப்பா, அம்மா மற்றும் மாற்றுத் திறனாளியான தம்பி.  பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார்கள். அவளுடைய கணவரோ கப்பல் துறையில் பணியாற்றும் கடல் சார் பொறியாளர் (Marine Engineer) .  இவருடைய வாழ்க்கையே ஆறு மாதம் கப்பலில் பணிபுரிவது,  சில சமயங்களில் 6 மாதங்கள்  அல்லது 3 மாதங்கள் கழித்துதான்  வீட்டிற்கு வருவார். 


ஜெலினா டீச்சருக்கு தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து அனைவருக்கும் சமைத்துவிட்டு,அப்பா அம்மாவிற்கு மருந்து மாத்திரைகள் ஒரு டாப்பாவில் போட்டு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு, பள்ளிக்கூடத்திற்கு அவசர அவசரமாக சாப்பிட்டு, தானும் ரெடியாகி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அவசர வாழ்க்கை.  ஒரு மெஷின் போல வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


ஒரு நாள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பிற்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்ஸாம் (chemistry practical exam) நடந்து கொண்டிருக்கும் சமயம். அதுவும் பப்ளிக் எக்ஸாம் நடக்கிறது. அவள் காலையிலேயே 8:00 மணிக்கு கிளம்ப வேண்டும் என்று சிம்பிளான சமையல் செய்துவிட்டு,அவசர அவசரமாக பள்ளிக்குச் சென்று விட்டாள்.


அங்கு பள்ளியில் மாணவர்களுக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. அவள் மிகவும் டென்ஷனாக தனது மாணவர்கள் முழு மதிப்பெண் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு மிகவும் பிசியாக இருந்த தருணம்.


இங்கே வீட்டில் ஜெலினா டீச்சரின் அப்பா குளித்துவிட்டு வெளியில் வரும் பொழுது பாத்ரூமில் கீழே விழுந்து விட்டார். வயதான அம்மா,  தம்பியால் அவரை தூக்கி எழுப்ப இயலவில்லை. எனவே, அவர்கள் பெரும் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து அவரை கை தாங்கலாக தூக்கிவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். அவர் வலியில்  துடிதுடித்து போனார். உடனே டீச்சருக்கு ஃபோன் செய்யுங்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழும்பியது.


உடனே டீச்சரின் அம்மா 'இல்லை என் மகளுக்கு பிராக்டிகல் எக்ஸாம் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது, அவளை அழைக்க இயலாது' என்று கூறுகிறாள். எனவே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அவருக்கு இடுப்பு எலும்பு ஒடிந்து விட்டது,  சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.


உடனே அவள் அம்மா இல்லை டாக்டர் என் மகள் பள்ளியில் இருந்து வர வேண்டும் அதுவரை ஏதாவது கட்டுப் போட்டு விடுங்கள் என்று கூறுகிறார். மருத்துவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கே தம்பி மட்டும் வீட்டில் இருக்கிறான். மாலை  பிராக்டிகல் எக்ஸாம் முடித்து மாணவர்கள் எல்லோரும் நன்றாக பரீட்சை எழுதிய மனநிறையுடன் சந்தோஷமாக வீடு திரும்புகிறாள்  ஜெலினா. வீட்டினுள்  நுழைந்த உடன் பேரதிர்ச்சி  காத்திருப்பது அவளுக்கு தெரியாது.


வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் தம்பி ஓடி வந்து அக்கா... "அப்பா காலையில பாத்ரூம்ல கீழே விழுந்துட்டாரு, அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று ஹாஸ்பிடலில் அட்மின் செய்துள்ளனர். அம்மாவும் ஆம்புலன்சில் கூட சென்று விட்டார். என்ன நடந்தது என்று நீ போய் பாரு" என்று கூறுகிறான்.


அவளுக்கு தலை மேல் இடி விழுந்தது போல, நெஞ்சை பிளக்கும் அளவிற்கு துக்கமும் அழுகையும் நிறைந்து  என்னடா? ஆச்சு.… என்ன? நடந்தது என்று கேட்க கூட நேரமில்லாமல் உடனே ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறாள்.


அங்கே ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்த்தவுடன், டாக்டரிடம் பேசி ஆப்ரேஷனுக்கு பணம் கட்டிவிட்டு, இயேசுவை வேண்டி ஆபரேஷன் தியேட்டர் முன் அழுது கொண்டே நிற்கிறாள். ஆப்ரேஷன் நடக்கும்  வேளையில்  அவள் ஆழ்மனதில்  மனதில் ஓடிய விஷயங்கள்.. "இப்பொழுது தானே சிறிது சந்தோஷப்பட்டேன். என் மாணவர்கள் அனைவரும் நன்றாக பரீட்சை எழுதினர் என்று, அந்த சந்தோஷம் முழுமையாக அனுபவிக்க கூட என்னால் இயலவில்லையே... அதற்குள் இவ்வளவு பெரிய துக்கமா!... எனக்கு என்று அழுது கொண்டே நிற்கிறாள்.


மாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகனுக்கு கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுக்க வேண்டும், மாலை டியூஷனுக்கு வரும் மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்க வேண்டும். என்ன? செய்வேன்... இறைவா... எனக்கு  மனவலிமையுடன் இத்தனை விஷயங்களை சமாளித்து வரும் திறமையை கொடு என்று பிரார்த்தனை செய்கிறாள்...


ஜெலினா டீச்சரை போல சாண்ட்விச் தலைமுறையில் இருப்பவர்கள் படும் பாடு இதுதான். இப்படித்தானே ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு விஷயங்களும், நிகழ்வுகளும், துக்கங்களும், சோதனைகளும், வேதனைகளும் நடந்து கொண்டிருக்கின்றது.  

 

"நல்லதே நடக்கும் என்று நம்பி ஜெலினா டீச்சரைப் போல வாழ்க்கையில் போராடி ஜெயிப்போம்".


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி  பாலசுப்ரமணி.