அண்ணன் விநாயகருக்கான சங்கடஹர சதுர்த்தியும்.. தம்பி முருகனுக்கான கிருத்திகை விரதமும்!

Swarnalakshmi
Oct 10, 2025,11:57 AM IST

சுக்கிரவார சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை விரதம்.. விசுவாவசு வருடம் 2065 அக்டோபர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை அண்ணன் விநாயக பெருமானை வழிபடும் சங்கடஹர சதுர்த்தியும், தம்பி முருகப்பெருமானை வழிபடும் கிருத்திகை விரதமும் சேர்ந்து அமைந்திருப்பது மிகவும் சிறப்பான நாளாகும்.


இந்த ஒரு நாள் விரதம் இருந்தால் விநாயகப் பெருமான் ஆசியும், முருகப்பெருமான் அருளும் கிடைக்க பெறலாம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதனால் அனைத்து விதமான துன்பங்கள் நீங்கும். விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேய்பிறையில் வரும் சதுர்த்தியில் அதாவது பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் வரும் ' சங்கடஹர சதுர்த்தி'யில் விரதம் இருந்து வழிபாடு செய்ய துன்பங்கள் தேய்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


'சங்கடம் 'என்றாலே துன்பம் 'ஹர 'என்றால் துன்பத்தை வேருடன் அறுப்பவர் என்று பொருள்படுகிறது. எந்த வகையான துன்பமாக இருந்தாலும் அதனை வேருடன் அறுத்தெடுக்கும் விரதமாக 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வளர்பிறை சங்கடஹர சதுர்த்தி நாளை விட தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு பெரும்பாலானோர் விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இன்று மாலை சந்திர உதயத்திற்கு பிறகு கோவில்களில் நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது அவரவருக்கு ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.




சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.இதனை 'தூர்வாயு க்ம பூஜை' என்று அழைப்பார்கள். அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபட செய்யும் காரியம் தடைபட்டால் அது நீங்கும் என்றும்,நோய்களிலிருந்து விடுபடலாம்,கடன் தொல்லை உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகம் படைத்து வழிபடுவது சிறப்பு. விநாயகர் எளிமையான கடவுள்.அவரை மனதார வணங்கி வழிபடுபவருக்கு  கேட்கும் வரங்களை வாரி வழங்குவார்.விநாயகர் சிலையோ படமோ தேவையில்லை.மஞ்சள், சந்தனம்,சாணம் என எந்த பொருளில் விநாயகரை ஒரு பிடித்த பிடியாக பிடித்து வழிபட்டாலும் அதில் அவர் எழுந்தருளி நமக்கு அருள் புரிவார். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் அகவல், விநாயகர் போற்றி துதி, "ஓம் கம் கணபதியே நமஹ" என்னும் மந்திரத்தை 11 முறை அல்லது 108 முறை சொல்வது சிறப்பு. விநாயகர் கோவிலில் அவரை 11 முறை அல்லது 21 முறை வலம் வருவது சிறப்பானதாகும்.


கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் இந்த நாள் முருகப்பெருமானுக்கு  விரதம் இருந்து வழிபாடுகள் செய்ய குடும்ப மகிழ்ச்சியும் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும்.


கார்த்திகை விரதம் மேற்கொள்வது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் திருமண தடை உள்ளவர்கள் கிருத்திகை விரதம் இருப்பதனால் திருமணத்தடை நீங்கி, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம். முருகன் படம் அல்லது சிலை வைத்து, தீபம் ஏற்றி, முருகனுக்கு பிடித்தமான மலர்கள், நைவேத்தியங்கள் படைத்து, விரதம் இருப்போர் பால்,பழங்கள் போன்ற எளிமையான உணவுகளை உட்கொண்டு முருகனுக்கு உரிய கந்த சஷ்டி கவசம்,கந்தர் அனுபூதி,கந்த குரு கவசம், குமாரஸ்தவம், வேல்மாறல்  படிக்கலாம் . "ஓம் சரவணபவ " எனும்  முருகன் மந்திரத்தை கூற அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.


வெள்ளிக்கிழமையான இன்று விரதம் மேற்கொண்டு விநாயகப் பெருமானையும், முருகனையும் வழிபட்டு மகிழ்வுடன் வாழ்வோமாக. மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.