வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!
வண்ணங்களும் மகிழ்ச்சியும்தான் இந்தியாவின் அடையாளம்.. இந்தியாவின் அழகே ஒரு வண்ணயமான கோலம்தான்.. ஆமாங்க, நம்ம நாட்டில்தான் கோலம் மிகப் பெரிய அடையாளமாகவும் கலாச்சார சின்னமாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் விதம் விதமான கோலங்கள் உள்ளன. அதில் ஒரு வடிவம்தான் ரங்கோலி. ரங்கோலி என்பது இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் அழகான ஒரு தரை ஓவியக் கலை ஆகும். இது வீட்டின் வாசலில் அல்லது தரையில் வண்ணப் பொடிகள், அரிசி மாவு, அல்லது பூக்களைப் பயன்படுத்தி வரையப்படும் அலங்கார வடிவங்களைக் குறிக்கிறது. ரங்கோலி என்ற வடமொழிச் சொல்லுக்கு 'நிறங்களின் வரிசை' என்று பொருள். ரங்கோலியை நமது தமிழ்நாட்டில் கோலம் என்று ஒற்றைச் சொல்லில் அழைக்கிறோம்.
வீட்டின் வாசலில் ரங்கோலி போடுவது, வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மற்றும் தெய்வங்களை அன்போடு வரவேற்கிறோம் என்பதைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, செல்வம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கோலம் கருதப்படுகிறது. வீட்டுக்கு எந்தத் தீய சக்தியும் வராமல் தடுக்கவும் ரங்கோலி உதவுகிறது என்பது நம்பிக்கை.
பழங்காலத்தில் கோலத்தை அரிசி மாவில் தான் போடுவார்கள். இதனால், காலையில் எறும்புகள் மற்றும் சிறிய பறவைகள் அந்த மாவை உணவாக சாப்பிடும். இது மற்ற உயிரினங்களுக்கும் உணவளிக்கும் ஒரு நல்ல பழக்கமாகக் கருதப்பட்டது. காலையில் எழுந்து வாசலைத் தூய்மைப்படுத்தி கோலம் போடுவது, அந்த இடத்தை சுத்தமாகவும், மங்கலகரமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ரங்கோலி வரைய பொதுவாக அரிசி மாவு (அல்லது கோல மாவு), வண்ணப் பொடிகள் (இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது), மஞ்சள் மற்றும் குங்குமம், பூக்கள் மற்றும் அவற்றின் இதழ்கள் (குறிப்பாக ஓணம் போன்ற பண்டிகைகளில்), தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
கோலத்தில் பல வகை உண்டு. புள்ளிக் கோலம், இழைக் கோலம், பூக்கோலம் இப்டி பல வகைகள் உண்டு. ரங்கோலி என்பது நம் கலை மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு அழகான வழியாகும். இது நம் வாழ்விலும் வீட்டிலும் வண்ணங்களையும், மகிழ்ச்சியையும் சேர்க்கிறது!
இப்படிப்பட்ட ரங்கோலியில் தலை சிறந்து விளங்குகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி கிஷோர். இவரது தாய் வழி வீடு சேலம் மாவட்டம் நரசிங்காபுரம் ஆகும். திருமணத்திற்குப் பின்னர் சங்கராபுரம் வந்து விட்டார். கணவர், 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சி கரமாக வாழும் பத்மாவதிக்கு ரங்கோலி என்றால் ரொம்ப இஷ்டமாம்.
விதம் விதமான ரங்கோலியைப் போட்டு விளையாடுகிறது இவரது விரல்கள். சிறிய ரங்கோலிக் கோலமாக இல்லாமல் பெரிது பெரிதாகவும் போடுவது இவரது சிறப்பாகும். கடவுள்கள், தலைவர்கள், இயற்கை என விதம் விதமான ரங்கோலிக் கோலம் போடுகிறார் பத்மாவதி கிஷோர். ரங்கோலி மட்டுமல்லாமல், நன்றாக ஓவியம் வரையும் திறமையும் இவரிடம் உள்ளது.
இதெல்லாம் எப்போது எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்று பத்மாவதி கிஷோரிடம் கேட்டபோது, எனது தாயாரிடமிருந்து தான் முதலில் கற்றுக் கொண்டேன். சிறுவயதில் அவரிடம் கற்றுக் கொண்டேன். பின்னர் புக்ஸ் பார்த்து கற்றேன். இப்போது யூடியூப் பார்த்தும் நிறைய தெரிந்து கொள்கிறேன்..
ரங்கோலி மட்டுமல்லாமல், டிராயிங்கும் செய்வேன். இயற்கை குறித்த பல ஓவியங்கள் வரைந்து நிறையப் பரிசுகள் வாங்கியுள்ளேன் என்று கூறுகிறார் பத்மாவதி கிஷோர். குடும்பத்தைத் திறம்பட நடத்தி வருவது, ஓவியங்கள், ரங்கோலி போடுவது ஆகியவற்றுடன், தனது கணவர் நடத்தி வரும் மினி டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அவரது பிசினஸுக்கு , உதவியாகவும் இருப்பதாக பெருமிதத்துடன் கூறுகிறார் பத்மாவதி கிஷோர்.
இதுதவிர ரத்னா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளிலும் பத்மாவதி கிஷோர் பங்கேற்று அங்கும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
பாராட்டுகள் பத்மாவதி கிஷோர்.. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.