முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
அந்தி சாயும் பொழுதினிலே
அழகோவியமாய் வருவாளாம்
உடுக்களெனும் படைகளோடு
பவனி வரும் பேரழகி
முகிலெனும் மென்திரை விலக்கி
மோக முகமதைக் காட்டுவாளாம்
மாதத்தின் ஒரு நாளில் வண்ண ஒளி கூட்டுவாளாம்
அடர் இருட்டின் மையத்திலே ஆயிரம் இன்பம் அளிப்பாளாம்
கவி புனையும் புலவர்களின் கற்பனைக்கு உரம் கொடுப்பாளாம்
இளமை நினைவுகளில் எழில்தனை எடுத்தளிப்பாளாம்
அல்லிப் பெண் இதயம் தொட்டு இரவினிலே மொட்டவிழ்ப்பாளாம்
கவிஞர்களின் பாடுபொருளாய்க் காவியம் பல படைப்பாளாம்
நீள்விசும்பில் சுவாசத்தைச் சுகமாக மீட்டுவாளாம்
அழுகின்ற பிள்ளையைத் தேற்ற அன்னைக்குத் துணையாய் வருவாளாம்
வெட்ட வெளி பார்க்கையிலே வியப்பையும் தருவாளாம்
சந்ததி பல கோடி கண்டாலும் என்றும் கன்னியாய்த் திகழ்வாளாம்
காட்சியிலே சாட்சியாய் நின்று காதலும் கதைப்பாளாம்
என் அகத்திலிருந்தே எண்ணத்தில் ஏற்றுகின்றேன்...
விண்ணகப்பேரழகியின் விந்தை தான் என்ன சொல்ல ?
முதுமை வந்த போதும் வெண்பாவை அவள் முகம் காணத் துடிப்பதை
எப்படிச் சொல்ல?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)