Tamil Poem: சரியாக செல்கிறேன்.. சரியில்லாத பாதையில்!
- ஆரூர் சிவ. மணிவேல்
சரியாக செல்கிறேன்
சரியில்லா பாதையில்
உனக்கு தவறாய் தோன்றியதில்
தவறொன்றும் இல்லையே,
மன்னித்துக் கொள்ளடி
மன்னித்துக் கொல்லாதே
நான் சொல்வது புரியுமெனில்
நான் சொல்லாததும் புரியுமே,
கண்கள் பார்த்த உடனேவா காதலித்தோம்
கண்கள் பார்த்தும் காதலித்தோம்,
பேசிய உடனேவா காதலித்தோம்,
பேசிப் பேசி காதலித்தோம்,
காதல் உதிர்த்து காமத்திலா தத்தளித்தோம்,
காதலில் ஊர்ந்து காமத்தில் சஞ்சரித்தோம்,
மெய்மெய்யாக மெய்தீண்டினோம்
காதலின் ஏக்கப் பெருமூச்சில் மூச்சிறைத்தோம்,
உன் மார்பகங்களின் இடுக்கில் என் காமமும்,
என் மார்பின் மத்தியில் உன் காமமும் கலந்து
மனதில் தேக்கிய காதலை கண்களில் பிரசிவித்தோம்,
தொலைவாய் தொலைந்து போனோம்,
அன்றாடம் ஒவ்வொரு அசைவிலும் நீ என்னையும் நான் உன்னையும் நாம் நம் காதலையும்
சிறு இடைவெளியிலும் பெருகாதலாய் உணர்ந்தோம்,
காதல் கைசேர
என் கை கொண்டு உன் கழுத்தில் ஒரு தாலி கேட்டது சமுகம்
மூன்று முடிச்சி விவகாரத்தில் நம் காதலை ஓரம் தள்ளி
சண்டை போட்டுக் கொள்கிறது சாதி,
சண்டையின்றி கொல்கிது காதல்,
இந்த சாதிக்கும் சமுகத்திற்கும்
உன் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் நடுவே
தலையில் மஞ்சள் நீர் ஊற்றி பழிஆடாய் தலையசைக்காமல் விரைந்து விம்மி மிரண்டும் தயக்கமின்றி தலையசைக்காமல் நிக்கிறது பாவப்பட்ட நம்
காதல்!