தாமோதரன் ஸ்வீட்ஸ்!

Su.tha Arivalagan
Oct 09, 2026,11:44 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


தாமோதரன் இரண்டு வருடம் முன்பு வரை பிரபலமான பன்னாட்டு  கணினி நிறுவனத்தில் ஒரு பிரிவின் தலைமை இயக்குநராக பெருமையுடன்  வளைய வந்தவர்தான். எதிர்பாராவிதமாக ஆள் குறைப்பு வலையில் மாட்டிக் கொண்டார்.


வேலை போய்விட்ட அதிர்ச்சியில் உறைந்து  உறைந்து போய் விட்டார்.  இந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் ஆறுமாதம் படுக்கையில் இருக்க வேணாடியதாயிற்று. உடல்நலமான பின்னர், மனதை ஒருங்கிணைத்து, வேறு வேலைகளில் சேர  முயற்சித்தார்.  


ஐம்பது வயதுகளில் இருக்கும் அவருக்கு வேலை வாய்ப்பின் கதவுகள் அடைபட்டுப் போயின; என்பதை உணர்ந்து தன்னிலைக்கு வர ஒரு வருஷ காலம் ஆயிற்று. குழந்தைகள் படித்து திருமணமாகி வாழ்க்கையில் நிலை பெற்றுவிட்டார்கள்.




சொந்த வீடு வாழ்க்கை வசதி எல்லாம் இருந்தும், இனி இருக்கும் வாழ்நாளின் வெறுமை அவரை அச்சம் படுத்தியது

அப்போதுதான், அவருக்கு அந்த யோசனை தோன்றியது. தன்  வீட்டில் சமையல்  செய்யும்  சந்தானத்தின் கை பக்குவத்தில்  அவனோடு கூட்டாக,  "தாமோதரன் ஸ்வீட்ஸ்'  என்னும் வியாபாரம் இனிதே ஆரம்பம் ஆனது. 


முதலில் அங்கேயே விற்பனை செய்தவர், வியாபாரம் சற்று சூடுபிடிக்கத் துவங்கியதும், புத்திசாலித்தனமாக, மார்க்கெட்டிங் யுக்தியில், மனைவி பத்மாவின் தலைமையில் அக்கம் பக்க மகளிர் உறுப்பினராக சேரவும், சுயநிதி குழுவுக்கு. வங்கியில் எளிதாக கடனுதவி கிடைத்தது. சுயநிதி குழுவுக்கு ரெயில்வேயும் ஆதரவு தர ,மூன்றாவது ப்ளாட்ஃபார்மில் கடை போட இடமும் கிடைத்தது. 


காலமும் மாலையும்  தாமோதரன் இன்னோவா காரில் வந்து வியாபாரத்தை மேற்பார்வை பார்க்கும் முதலாளியாக பரிமளிக்க ஆரம்பித்து இருக்கிறார். வேலையோடு கோட்டும்  சூட்டும் போனாலும், இடுப்பில் பஞ்சகச்சமும், நெற்றியில் திருமண்ணும் கைகொடுக்க; வியாபாரம் அமோகமாகப் போகிறது என்று கேள்வி.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)