நற்காலை பொழுது!

Su.tha Arivalagan
May 25, 2026,04:52 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


புலர்ந்தும் புலராத 

காலைப் பொழுது

விடிவெள்ளி மயங்கி

விரியும் சூரியன்

சற்றே தாமதமாக வரட்டுமே...

இன்று ஒரு  நாள்!


அதிகாலை சாரலின்  ஓசை;

சலங்கை ஒலி போல்

இளங்காற்றில் சாமரம்  வீசும் தென்னை;

பவளமல்லியின் வாசம்;

படுக்கையின் கதகதப்பு;

போர்வையின் இருட்டிலும்;

தேன்சிட்டுக்குருவியின்     

கொஞ்சும் கீச்சலின் இனிமை தடைபட்டது.




ஸ்டீஃபனின் சீட்டி ஒலியுடன்  

செய்தி தாள் விழும் ஒலி;

தொடர்ந்து 

பால் பாக்கெட்  விழும் சப்தம்;

முன் வாயில்  கேட்

'க்றீச்' ஒலி

கெங்கம்மாவின் வருகை.

"ஏங்க! " அவளின் குரல்;

 காஃபி ரெடி

காலை  புலர்ந்ததை அறிவித்ததாகி  விட்டது.


அப்படியும்....

கண்மூடி படுத்திருந்தவன் 

நெஞ்சின் மேல் இதமாக

பூனைக்குட்டி போல், விழுந்த மகள் கழுத்தைக் கட்டி;

கன்னத்தில் முத்தமிட;

நற்காலை பொழுது 

நன்றே விடிந்தது!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)