செவித்திறன் கருவி எங்கே?
- சசிகலா விஸ்வநாதன்
கல்யாண மண்டப களேபரம்!
கைபேசி அழைப்பு வர;
செவி கருவி
செவியில் இல்லாததை உணர்ந்தேன்!
இருக்கைக்கு கீழே,
சுற்றும் முற்றும் பார்த்தேன்!
எவரும் அறியாமல்
உணவுக் கூடத்திற்கு சென்று தேடினேன்!
இங்கே,அங்கே, என்று எங்கும் தேடினேன்!
மனம் பதைபதைப்பு
கொண்டு அடங்க,
அரை மணி நேரம் ஆயிற்று!
மகள், என்ன சொல்வாள்?
"போனால் போகட்டும்; விடு!
பழைய கருவி!
நானே புதிது வாங்க நினைத்திருந்தேன்."
அவர் என்ன சொல்வார்?
" எப்பவும் கவனமின்மை!
எதிலும் பதட்டம்!
படித்து படித்துச் சொன்னேனே!
எதிலும் கருத்தின்மை!
என் சொல் பேச்சு
என்றாவது கேட்டிருக்கிறாயா?"
நேரில் பேசுவது போல் இருந்தது!
'சட்' என துளிர்த்த
கண்ணீரை மாற்றினேன்;
எவருக்கும் ஐயம் வராதபடி!
சங்கடத்திலிருந்து எளிதாவதற்கு
ஆயிற்று; இரண்டு மணித்துளிகள்!
அனைவருடன் உரையாடல்!
விருந்தாடல்!
நன்றி கூறல்!
விடை பெறுதல்!
ஆட்டோவில் அம்புபோல் சவாரி விடுதி நோக்கி.
அடுத்த ஐந்து மணித்துளிகள்
ஐந்து யுகமானது.
அறை வந்தேறினேன்!
கதவைத்திறந்ததும்
கண்ணில் பட்டது;
மின்னேற்றி பேழையில்
சாது பிள்ளையாய்
எனதருமை செவித்திறன் கருவி!
பளீரென்று
பச்சை நிறத்தை உமிழ்ந்தவாறு!
ஆம்!
வெளியேறிப் போகும் முன்
இருந்த பரபரப்பில்
செவியில் பொருத்த
மறந்திருக்கிறேன்!
எனக்கு இப்போது தோன்றுவது , ஒன்றே!
செவிக்கருவி இல்லாமல்,
மற்றவர் பேசுவது எப்படி கேட்டது?
எனக்கு செவிப் புலன் குறைபாடே இல்லையா?
கதவை எவரோ பலமாகத் தட்டும் ஓசை!
கதவின் தாழைத் திறக்க ;
மகள் தான்!
எத்தனை முறை அழைப்பு மணியை ஒலிப்பது?
எத்தனை தடவை
உன் அலைபேசிக்கு அழைப்பு விடுப்பது?
எதார்த்தம் உணர்ந்து மௌனித்தேன்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)