உருமாற்றம்!
- சசிகலா விஸ்வநாதன்
அலைகடல்
கரையோரத்தில்
பத்து வயதில்
நான் பார்த்த
பெரியதொரு பாறாங்கல்...
அதே இடத்தில்
சற்றே மாறுபட்ட தோற்றத்தில்!
சற்றே சிறிதாய்!
பாறையடியில் சிதலங்களாய்
சிதறிய சிறுகற்கள்
அலையலையாய்
பொறுப்புகள்!
சுமந்த கடமைகள்!
எதிர் கொண்ட ஏமாற்றங்கள்!
அலைகடல் அலைகள் வலிக்காமல்
அடித்த தடங்களால்,
நோகாமல் நொந்த நொம்பலங்களினால்,
வருந்தாமல் வருந்த வைத்த வருத்தங்களினால்;
படிப்படியாக
உருமாறி
இப்போதிருக்கும் தோற்றம்;
என் தந்தையின் சாயலில்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)