Short Story: அதிகாரம்

Su.tha Arivalagan
Jul 23, 2026,03:37 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஶ்ரீதரன் பூந்தோட்டத்தின் நடுவே குங்கும சிமிழ் போல் அமைந்திருக்கும் வீட்டின் முன்னே தன் டொயோட்டாவை நிறுத்தி உள்ளே செல்ல முயன்றான். அந்தத் தெரு முழுவதும் கார்களினாலும் இருசக்கர வாகனங்களினாலும் நிறைந்திருந்தது.


'முனைவர். விமலா கிருஷ்ணமூர்த்தி' என்ற பதாகை அவனை வரவேற்றது. வருவோரும் போவோருமாக  கூட்டம் அமைதியாக  இயங்கிக் கொண்டிருந்தது. சமையல் வேலையில் இருக்கும் பிரேமா, ராணுவ ஒழுங்கில்  அனைவருக்கும் காஃபி அளித்து கண்களாலேயே உபசரித்துக் கொண்டிருந்தாள்; கல் போல் இருந்த முகத்துடன். 


கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தன் சித்தியைப் பார்த்ததும் , அவன் கண்கள் குளமாகியது. வாரம் இரண்டு முறையாவது  சித்தியை சந்திப்பது ; இருவருக்குமே பிடித்தமான விஷயம். அரசியல், ஆன்மிகம் என்று அவர்கள் பேசாத விஷயம் ஒன்றுமில்லை. திடீரென மயங்கியதும், ‘ஸ்ட்ரோக்’ என்று மருத்துவர்கள் சொன்னதும்; அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 


இரண்டு  நாள்கள் முன்பு கூட அவர்கள் சேர்ந்து அருகிலிருக்கும் பூங்காவில் நடைப் பயிற்சிக்கு சென்று வந்திருந்தார்கள். அறுபது வருடங்களுக்கு  முன்பே, அமெரிக்காவில் போய் படித்து, பயோ கெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் வாங்கி, இந்நகரத்தில் உள்ள  புகழ் பெற்ற மகளிர் கல்லூரியில் துறைத் தலைவராக இருந்த முதிர் கன்னியால் அவன் சித்தப்பாவின் வாழ்க்கையில், அவரது நாற்பத்தி ஐந்தாம் வயதில் வசந்தம் வந்தது; என்று அத்தை ஜானகி சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்போது ஜானகி அத்தைக்கு மட்டுமே கல்யாணம் ஆகியிருந்ததாம். அப்போது அவனுடைய அப்பாவுக்கும், மற்ற சித்தப்பாவுக்களுக்கும், கூட திருமணம் ஆகவில்லை. இப்போது  நாற்பது வயதைக் கடந்த ஶ்ரீதரனுக்கும், முப்பத்தெட்டு வயதைக் கடந்த அவன் தம்பி ஶ்ரீகரனுக்கும் இன்னும் மணமாலை பூக்கவில்லை. 




சொந்தமாய் வீடு, கை நிறைய வரும்படி, பெரிய பொறுப்புகள் இல்லாத குடும்பம்; இருந்தும், அவர்கள் தேடும், இறை நம்பிக்கையுடைய, அசைவம் தவிர்க்கும் பெண், அவர்கள் இனத்தில் இருப்பதாகத் தெரியவில்லை; அவர்களுக்கும், அது பற்றின விசனமும் வியாகூலமும் அகன்று போய் ஐந்தாறு வருடங்கள் ஆகின்றன. கிட்டாத ஒன்றைப் பற்றின வேட்கை, இப்போது முற்றிலுமாக அகன்று விட்டது. காலத்தில் பூக்காத குண்டு மல்லி வாசம் போல்; ஆசையின் எச்சம் ஒன்றுமில்லை; அவர்களுக்கு.


இப்போது அவன் சித்தி அவனை வரும்படி சொல்வகாக மிதிலா ஃபோன் பண்ணி சொல்ல; இதோ, அவன் இங்கே. சித்தியின் கைபிடித்து அமர்ந்தவனிடம், அவள் சைகையால் ஶ்ரீதரன் தான் தனக்கு அந்திமக் கிரியைகளை ஶ்ரீதரன் தான் செய்ய வேண்டும் என்று சொல்ல; திடுக்கிட்ட அவன் மிதிலாவை திரும்பிப் பார்க்க; “ஆம் . அம்மா அப்படித்தான் சொல்கிறாள். என் தம்பி மதுவை மறந்து விட்டாளா; எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உனக்குத்தான் முதல் அதிகாரம்  இருக்குன்னு சொல்லிண்டே இருக்கிறாள். மது நாளை காலை இங்கு வந்துவிடுவான். என்ன செய்வது என்று புரியவில்லை.” என்றாள்.


இப்போது ஶ்ரீதரனுக்கு ஒரு எண்ணம் மனதில்; மின்னல் போல், உதித்தது. தனக்கும் தன் தம்பி ஶ்ரீகரனுக்கும் அந்திம கிரியை செய்ய யாருக்கு அதிகாரம் உண்டு? யார்,எவரிடம், என்ன, சொல்ல வேண்டும்? அவனுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.


சன்னலோரம் இருந்த  வேப்ப  மரத்திலிருந்து சிறகு விரித்த காகக் கூட்டம்; அவனுக்கு ஏதோ சொல்ல வருவது போல் இருந்தும்; அவனுக்கு ஏதும் விளங்கவில்லை. நாளை நடப்பது உன் கையில் இல்லை; கவலை விடு என்கிறதோ? விடையில்லா இந்த வினா; பல கேள்விகளை மட்டும் பதில்களாக உதிர்த்துக் கொண்டே இருந்தது; ஶ்ரீதரனை மிகவும் சங்கடப் படுத்தியது


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)