Tamil Short Story: இரு கோணங்கள்!
- சசிகலா விஸ்வநாதன்
வசுமதி நீண்ட பெருமூச்சு விட்டதில் ஆசுவாசமாக உணர்ந்தாள்.எதிரில் கணவன் ராமசுப்புவின் நாற்காலி காலியாக இருந்ததைப் பார்த்து, மிகுந்த வருத்தம் அடைந்தாலும் ஒரு நிம்மதியும் வந்திருந்தது.
அவளுக்குள் காலம் கடந்து இரண்டாம் தாரமாக மணவாழ்க்கையில் நுழைவது; எத்தனை பெரிய தவறு; என்பதை அணு அணுவாய் உணர்ந்திருந்தும், தாய் தந்தை இன்றி, திருமணமான தம்பி வீட்டில் அடைக்கலம் புகுவதைவிட ,இது எத்தனையோ மேல்; என்றே முடிவெடுத்தே மணம் புரிந்திருந்தாள்.
துள்ளல் கூடிய தாம்பத்ய உறவு இல்லை எனினும், அமைதியும் இனிமையுமான வாழ்வு அமைந்திருந்தது ராமசுப்புவுக்கும் வசுமதிக்கும் இடையே பன்னிரெண்டு வயது வித்தியாசம், இருந்தாலும், அதை அவள் பொருட்படுத்தவில்லை.
செல்வமும் செழிப்புமான வாழ்வு இல்லை; எனினும், கண்ணியமான அன்பான கணவருக்கு, பிரியமாக பணிவிடை செய்தது நிறைவையே தந்திருந்தது , அவளுக்கு. மழலை உண்டாகவில்லை என்ற வருத்தமில்லை; அவர்களுக்கு. ‘மலடி’ என்று அக்கம்பக்கத்தோர் கிசு கிசுத்துக் கொண்டிருந்தாலும்; அந்த வம்பு வார்த்தைகளை மனதால் புறம் தள்ளி, அவர்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வாழும் கலையை ராமசுப்புவிடமிருந்து கற்று தேர்ந்திருந்தாள்.
நாற்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்று ஆளாக்குவதில் இருக்கும் சவால்களை உணர்ந்தே அவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தனர். இனியும் அவள் எவரையும் சார்ந்து வாழவேண்டிய அவசியம் இல்லை.’மனைவி’ என்ற நிலைக்கு தகுதியானதால், வரும் குடும்ப ஓய்வூதியம் அவளுக்கு ஒரு சமூக பாதுகாப்பையும் பொருளாதார சுதந்திரத்தையும் அளித்ததில் அவள் நிறைவையே அடைந்தாள்.
இருக்க சொந்தமாய்,சிறியதாய் இருந்தாலும் வசிக்க ஒரு வீடும், நிலையான பொருளாதாரமும், தந்த அவள் கணவன் ராமசுப்புவை நன்றியுடன் நினைத்தவுடன் அவள் கண்ணில் கண்ணீர் பெருகியது. பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பியின் மனைவி, சுசித்ரா,'அழாதீங்க! அக்கா! மனதை திடப்படுத்திக்குங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம். நாங்க வந்து கூட இருக்க முடிவெடுத்துள்ளோம் ' என்று சொல்வது,வசுமதிக்கு சிரிப்பைத்தான் கொடுத்தது.
மன உறுதியுடன் தான் அவள் இருக்கிறாள்; என்பதை அவளுக்கு எப்படி உணர்த்துவது? உறவோடு வேகுவதை காட்டிலும், ஒரு கட்டை விறகோடு வேகுவது எளிதல்லவா? “தேவையில்லை சுசித்ரா! நான் தனியாகவே இருந்து கொள்கிறேன். உங்களால் முடியும் போதும்,நீங்கள் விரும்பும் போதும், அவ்வப்போது என்னை வந்து பாருங்கள். ‘நீ நலமா; நான் நலமா’; என்று என்றே நம் உறவு இருக்கட்டும் ‘விட்டும் தொட்டும்’.
என் விதி இப்படி; என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று பட்டு கத்தரித்தது போல், சொல்லி எழுந்த வசுமதியை வினோதமாகவும் குரோதமாகவும் பார்த்தாள்; சுசித்ரா. வசுமதி தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, சன்னல் மேடையில் இருந்த பழைய பூ அலங்காரத்தை எடுத்து வீசி விட்டு, புதிதாக பூத்த மஞ்சள் ரோஜா கொத்தை அலங்காரமாக வைக்க ஆரம்பித்தாள்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)