நேரத்தில் ஒரு நேசக்கரம்!
- சசிகலா விஸ்வநாதன்
காஜா மைதீன் தன் மகள் சயிராவின் நிக்காவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அருப்புக்கோட்டை வந்திருந்தான் .அருகே திருச்சுழியில் வாப்பாவின் சிற்றப்பா வீட்டில் பத்திரிகை வைத்து விட்டால், மதுரை திரும்பி விடலாம்.
மதியம் மூன்று மணி வெயில்,வாட்டி எடுத்தது. மதியம் உணவு கூட அருந்தவில்லை. உம்மா,"ஒரு கை சாப்பிட்டு போடா", என்று .சொல்லத்தான் செய்தாள். "விரைவாக பத்திரிகை வைத்துவிட்டு,மதுரை போய் ஆகணும். எவ்வளவோ சோலி கிடக்கு. சாரா வேற காத்திருக்கும்." என்று காஜா கிளம்பிவிட்டான். நல்ல வேளையாக பேருந்து சரியான நேரத்தில் வந்தது. சன்னலோர இடம் கிடைக்க பேருந்தின் ஆட்டத்தில் கண்ணயர்ந்து விட்டான்.
"சட்" என்ற ஓரு குலுக்கலுடன் பேருந்து நின்று விட்டது. “ப்ரேக் டௌன்; மாற்றுப் பேருந்து வரும். ஏற்றிவிடுகிறேன்,”,; என்றவாறு டிக்கெட்டுகளில் கையொப்பம் இட்டார்;நடத்துனர். பக்கத்திலிருக்கும் டீக்கடையில் காஜா ஓரு மசால் வடையும் டீயும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கையிலே மாற்றுப் பேருந்து வந்து பயணிகளோடு நடத்துனரும் கிளம்பிவிட்டனர். காஜாவுக்கு எரிச்சலாயிற்று.
அண்ணே! இருபது ரூபாயி என்ற கடைக்காரன் குரலில் எதார்தத்ததுக்கு வந்த காஜா ஐநூறூ ரூபாய் தாளை எடுத்து கடைக்காரனிடம் நீட்ட; "அண்ணே! இந்த குக்கிராமத்திலே ஐநூறு ரூபாய்க்கா வியாபரம் ஆகும்? சில்லறையா கொடுங்கண்ணே," என்றான்;கடைக்காரன். கடுப்புடன்."கூகுள் பே" போட்டு விடட்டா ? என்றான் காஜா. அவன் "பே" என்று விழித்தான்." போன் பே?" என்று கேட்க; "சில்லறை பார்த்து கொடுங்கண்ணே; பொழப்பை கெடுக்காதீங்க." என்றான்.
இவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றவில்லை. சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விஷயம் சொல்லி ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கேட்க; அவர் என்னிடம் சில்லறை இல்லையே;இந்த கடைக்காரன் ஒரு மார்க்கமான ஆளாச்சே! அவன் கிட்டேயா போய் மாட்டினீங்க! சரி பிடிங்க; என்று இருபது ரூபாய் தாளை எடுத்துக் கடைக்காரனிடம் நீட்டினார்.
’சார் !உங்க ஃபோன் நம்பர் கொடுங்க.பணம் போட்டு விடுகிறேன்,’என்றான், காஜா.’சார்!நான் ஒரு சாதாரண கோயில் குருக்கள் .என்னிடம் அது மாதிரி ஃபோன் எல்லாம் கிடையாது. ஒரு இருபது ரூபாய் தானே. விடுங்க, மனுஷனாய் பொறந்தவன் ,சமயத்தில் செய்ய வேண்டிய சிறு உதவி .என்னால் செய்ய முடிந்ததில் எனக்கு சந்தோஷம் ’என்றார்.
ஆமா! நீங்க எங்கே போகணும்? திருச்சுழியா? இன்னும் ஒருமணி நேரம் ஆகும்;அடுத்த திருச்சுழி பஸ் வருவற்கு. நான் திருச்சுழி திருமேனிநாதர் கோவில் குருக்கள். வாங்க; இறக்கி விடறேன் என்றார்.
காஜாவின் கண்ணில் அந்தக் கோவில் குருக்கள், எல்லாம் வல்ல இறையாகவே தோன்ற.,"இன்-ஷா அல்லா,"என்றபடி அவருடைய சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்தான்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)