ரஞ்சிதமும் ரேவதியும்!

Su.tha Arivalagan
Oct 29, 2026,04:16 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


வீட்டு  வேலை எல்லாம் முடித்து வெளியே வந்த ரஞ்சிதம்; வாசல்  தாழ்வார சுவற்றில் சாற்றி வைத்திருந்த   சைக்கிளைப் பார்த்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் சத்தமின்றி மெதுவாக சைக்கிளை  உருட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.    


அண்ணாச்சி கடை  ராசு அண்ணன் வருவதைக் கண்டு;  "அண்ணே கொஞ்சம் பிடிச்சுக்கண்ணே;  எனக்கு  சைக்கிள்  விட பழகிக்கணும்னு ஆசையாய் இருக்கண்ணே" என்று  கெஞ்சினாள். " ஆத்தாடி! சைக்கிள் புதுசா இருக்கே! யாருடையது?" என்று விசாரிக்க;  இந்த வீட்டில்  நான் வேலை செய்கிறேன். அவங்க மக ரேவதிக்கு வாங்கியிருக்காங்க.  அவ ஏறி உட்காரவே பயப்படறா. சும்மா தான் நின்னுகிட்டு இருக்கு.  உருட்டிட்டு வந்துட்டேன். நேரத்தைக் கடத்தாம; கொஞ்சம் பிடிங்கண்ணே. " என்றாள்


" பார்த்துட்டா , வைய மாட்டாங்களா? சரி! பாவாடை தடுக்கும். தூக்கி செருகிட்டு ஏறு. ஒரு பத்து நிமிடம் தான் பிடிப்பேன். அண்ணாச்சி தேடுவார்" என்றதும்; ரஞ்சிதம் சைக்கிளை சற்றே சாய்த்து, ஏறி உட்கார்ந்தாள். " " அம்மாடி! இப்படி உட்கார்ந்தா உனக்கு பெடல் எட்டாது. நின்னுக்கிட்டே குரங்கு பெடல் போட கத்துக் கொடுக்கறேன். அதான் உனக்கு வாய்ப்பாக இருக்கும். " என்று சொல்லிக்கொண்டே. சைக்கிளை பிடித்துக் கொண்டு கூடவே ஓடி வந்தான். 




தெரு முக்கு போய் திரும்பிப் பார்க்க; மணி அண்ணன் நாடார் கடைக்குப் திரும்பிப் போய்க் கொண்டிருந்தான்.  

" ஆத்தாடி ! அண்ணன் என்னை விட்டுட்டு போயிருச்சே! என்ற நினைப்பில் பக்கத்தில் கட்டட வேலைக்குப் போட்டிருந்த மணல் குவியலில் வண்டியைப் போட்டு கீழே விழுந்தாள். 


கீழே விழுந்ததைப் பார்த்து சிரித்த சித்தாள் முருகேசன், " அம்புட்டுத்தான்!  தங்கச்சி!  சைக்கிளை எடு. நான் தள்ளி விடறேன். உனக்கு  சைக்கிள் விட வந்திருச்சு . ரெண்டு நாள் கீழே விழுந்து எந்திரிக்க, சைக்கிள் காலுக்கும் கைக்கும் பழகிக்கும். அப்புறம், காலும் கையுமே சைக்கிள் ஓட்டும். நீ சும்மா ராணி மாதிரி சைக்கிளில் உட்கார வேண்டியதுதான்" என்று சைக்கிளை தள்ளிவிட; சைக்கிளில் பறந்தாள் ரஞ்சிதம். ஆகாயத்தில் பறப்பது போலிருந்தது அவளுக்கு. 


சைக்கிளை ஓசைப்படாமல் இருந்த இடத்தில் வைத்து திரும்பியவளைப் பார்த்து, இடுப்பில் கைவைத்து மலர்ந்து சிரித்தாள் ரேவதி. " ரஞ்சிதம்!  சைக்கிள்  விட கற்றுக் கொள்ள சைக்கிள்  இருந்தால் மட்டும் போதாது.  தன்னார்வமும் விழைவும்,  முயற்சி யும்  வேண்டும்; இல்லையா? இன்று மாலை எனக்கு நீ சைக்கிள் விட கற்றுக் தருகிறாயா"  என்று கேட்டதற்கு சம்மதம் சொல்லும் வகையில் தலையை வேகமாக ஆட்டினாள் ரஞ்சிதம்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)