நல்ல காலம் பிறந்தது!

Su.tha Arivalagan
Aug 28, 2026,02:55 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல் கோபுர வாசல் தாண்டி இடது புறம் பார்வையைத் திருப்ப; மதில் ஓரத்தில் ஆடி வீதியில் வடக்குப் பார்த்து அமர்ந்திருப்பார் ; இந்த கல் பிள்ளையார். இவர்தான் பரிட்சை பிள்ளையார்.  இவர் தான் ஆடி வீதியில் உட்கார்ந்து படிக்கும்  ஏழை மாணவர்களுக்கு கண்கண்ட தெய்வம்.


இவருக்கு பூஜை புனஸ்காரம் ஒன்றுமில்லை. 


மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும்  இவர்  செய்யும் அனுக்ரஹத்துக்கு குறைவில்லை. ஒரு குழந்தை அவர் தும்பிக்கையில் ஒரு சாக்லேட் வைத்துக் கும்பிட்டு போக , அடுத்த குழந்தை அதை பிரசாதமாக உண்டு தன் பங்குக்கு முறுக்கோ கடலை மிட்டாயோ, வாழைப்பழமோ  இப்படி ஏதோ ஒன்றை படைத்துவிட்டுப் போகும். எப்படியாயினும் பரிட்சை நேரத்தில் இவர் சந்தி முதல் அந்தி வரை வாய் மூடா விரதம்தான். 


மீதி நாட்களில் முப்போதும் பட்டினி தான்.




அன்று சோமு  தனது மனப்பாட பகுதியான விநாயகர் அகவலை அவர்முன் உட்கார்ந்து  மனனம் செய்ய முற்பட, சிறிதாக கூட்டம் கூடியது.  ஒரு முதியவர், " அப்பனே! அருமை யாகச் சொல்கிறாய்!  இதன் பதவுரையும் கருத்துரையும் சொல்! கேட்போம்! என்றதும்" சோமுவும் தனக்குத் தெரிந்த அளவில் விநாயகர் அகவல் பற்றி ஒரு விரிவுரை ஆற்ற,  கேட்டவர்கள், கைதட்டி பாராட்டினார்கள்."  தம்பி நன்றாக சொல்கிறாய்!    நாமகள் உனது  புத்தியிலும் நாவிலும் வாசம் செய்கிறாள். 


தினமும் இங்கு வந்து ஏதேனும் சொற்பொழிவு  செய். உனக்கு அது நல்ல பலன் தரும் என்று சொல்ல; சோமு தினமும்  ஏதேனும் ஒரு பொருள் பற்றி அங்கு சொற்பொழிவு  செய்யத் துவங்க அவன்  இப்போது சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் ஆக உருவாக்கிக் கொண்டு இருக்கிறான்.


பிள்ளையாரை மதிலை ஒட்டி மேற்குப் பார்க்க  இருத்தி வைத்து, தினமும் சிறு பூஜையுடன்  "சொல்லின் செல்வன் ' திருவாளர் சோமநாதன் அவர்களின் சொற் பொழிவை இன்பமுடன் செவிகொள்கிறார் பரிட்சை பிள்ளையார்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)