வள்ளிமயிலும்.. கேஸ் கம்பெனியின் eKYC யும்!

Aug 26, 2026,03:15 PM IST

- சசிகலா விஸ்வாதன்


நேற்றுத்தான் செங்கல்வராயனும், வள்ளிமயிலும் நான்கு மாத  அமெரிக்க வாசம்  முடிந்து, இந்தியா திரும்பி இருக்கிறார்கள். 


வந்ததும் வராததுமாக , எதிர்வீட்டு சுகன்யா," வள்ளியக்கா! உடனடியா "கேஸ்" கம்பெனிக்கு ஒரு நடை போய் eKYC செய்து கொண்டு வந்து விடுங்க. இந்த  மாதம் 31ம் தேதி தான் கடைசி நாள். உங்களுக்கு , அமெரிக்காவில் இருக்கும் போதே மேசேஜ் பண்ணியிருந்தேன். யார் பெயரில் கனக்ஷன் இருக்கிறதோ அவங்கதான் போகணும்‌. அவங்க    செல்ஃபோனில் தான் eKYC  பண்ணணும். ஆதார் கார்டை செக் பண்ணிட்டு ஒரு ஃபோட்டோ எடுப்பாங்களாம். அவ்வளவுதானாம். 


ஆன்லைனில்  பண்ணலாம் தான். இந்த ஃபோட்டோ எடுக்கறதுதான் கஷ்டமாய் இருக்கு. ஃபோட்டோ  சரியா  வருவதில்லை; என்று மெசேஜ் வருது; அல்லது நம்ப ஃபோன் ரிஜிஸ்டர் ஆகலைன்னு மெஸேஜ் வரது. ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.  இதுக்கெல்லாம் நேரம் வேஸ்ட் பண்ணி டென்ஷன் ஆவதற்கு பதிலாக நாமே போய்விட்டு வந்துடலாம். இன்னும் நானும் பண்ணவில்லை. நாம்  நாளை மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு, இரண்டு பேரும் சேர்ந்தே போய் வந்து விடலாம்." என்றாள்


மறுநாள் சுகன்யா, மதியம் தன் அலுவலகத்திலிருந்து ஒரு மணி நேர  அனுமதியில் வர, இரண்டு பேரும் ஆட்டோவில் கிளம்பினார்கள். 




கேஸ் கம்பெனிக்கு முன்னால் ஏகத்துக்கும் கூட்டமாய் இருந்தது.  போலிஸ்கார்கள் வரிசையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள். வள்ளி மயிலுக்கு சோர்வாக இருந்தது. 30 மணி நேர விமான பயணமும்; பகல்- இரவு மாற்றமும் அவளுக்கு அயர்வாக இருந்தது." என்ன இது! இப்படி நடுரோட்டில் நிக்க வைக்கிறாங்க! என்னை மாதிரி வயசானவங்களுக்கு உட்காரக் கூட ஒரு வசதி பண்ணாமல் இருக்காங்க." என்று முனக; சுகன்யா, " அக்கா!  கேஸ் கம்பெனிகாரங்களும் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.  அதனால்தான் அவர்களால் உட்கார வசதி செய்ய முடியாமல் போய்விட்டது. நீங்க  உட்கார நான் ஏற்பாடு செய்கிறேன் என்று  அருகில் இருந்த வீட்டிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் சேரை கொண்டு வந்து வள்ளிமயிலை அமர வைத்தாள். 


அவர்கள் முறை வர ஒரு மணி நேரம் ஆயிற்று. வள்ளிமயிலின் ஆதார் கார்டை செக் பண்ணிய பின்னர் ஒரு ஆரஞ்சு கலர் கேஸ் ட்யுப் சுருள் ஒன்றை வள்ளிமயில் கையில் கொடுத்து 190  ரூபாயை இந்த க்யு ஆர் கோடை ஸ்கேன் பண்ணி கட்டுங்க" என்றாள் கவுண்டரில் இருந்த பெண்.  வள்ளிமயில் கடுப்பாகி விட்டாள். "ஏம்மா! நான் இதைக் கேட்டேனா? இது எனக்கு தேவையே இல்லை! என் வீட்டில்  இது போல் ட்யூப் இருக்கு. இது இல்லாமல் எனக்கு  e KYC பண்ணி விடுங்க." என்றாள்.


கவுன்டரில் இருந்த பெண், " அக்கா! இன்னிக்கு உங்களுக்கு e-KYC பண்ணணுமா, வேண்டாமா?  இதை வாங்கினால் தான் eKYC பண்ணணும்னு எனக்கு  என் ஆஃபிஸ் உத்தரவு. இப்ப என்ன சொல்றீங்க? வேலை நேரத்தில் என்ன தொந்தரவு பண்ணிட்டு ... கொஞ்சம் ஒத்தி நின்னு யோசிச்சு சொல்லுங்க. அடுத்த கஸ்டமரை நான் கவனிக்கிறேன்." என்று, பதிலுக்கு அவள் வள்ளியக்காவை அவள் கடுப்படித்தாள். 


அடுத்து நின்றிருந்த  சுகன்யா, " தங்கச்சி! கோவிச்சுக்காதே! அவங்க புரியாம பேசுறாங்க. அவங்களுக்காக நான் பணம் கட்டிடறேன். இந்தா! என்னோட ஆதார் கார்டு இதையும் செக் பண்ணி சொல்லு! அதற்கு உண்டான ட்யூப் காசையும், நான் இதோ, கட்டிட்டேன்." என்றதும், அடுத்து ஒரு  கேஸ் கம்பெனி சிப்பந்தி அவர்களை ஃபோட்டோ எடுத்ததும்,'eKYC'  வெற்றிகரமாக முடிந்ததாக அவர்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி தகவல் வந்தது. 


வள்ளிமயிலை அழைத்துக் கொண்டு சுகன்யா வெளியே வந்ததும் "நீ ஏன் சுகன்யா, கேஸ் ட்யுபை வாங்கினாய்? இப்படி எல்லாம் எந்த விதியும் இல்லை. இப்படி ட்யுப் வியாபாரம் பண்ணத்தான் ஆன்லைனை முடக்கி வைத்திருக்கிறார்கள். நான் போலிஸில் கம்ப்ளைன்ட் பண்ணப் போகிறேன். இதுக்கு ஒரு பில் கூட இல்லை" என்று பொறுமினாள்."


அக்கா! தயவு செய்து பொறுமையாக இருக்க மாட்டீங்களா? எனக்கு அவர்கள் இப்படி எல்லோரையும் பலவந்தப் படுத்துவது 'சரி' என்றே தோன்றுகிறது.  ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கேஸ் ட்யுப் மாற்றவேண்டியது மிகவும் முக்கியம். விபத்துக்களை தவிர்க்க இது மிகவும் அவசியம். நீங்கள்  கடைசியாக எப்போது  கேஸ் ட்யுப் மாத்தினீங்க; ஞாபகம் இருக்கா?" என்று கேட்டதும் வள்ளி மயில் விழித்தாள். 


"சுகன்யா! எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை! என் பையன் கல்யாணத்துக்கு முன்னாடி மாற்றினேன். எப்போன்னு; ஞாபகமே இல்லை அவன் கல்யாணம் முடிந்து பத்து வருஷம் ஆகிவிட்டது." என்றாள்.


"பார்த்தீங்களா! இப்ப புரியுதா? அவங்க ட்யுபுக்கு பில் கொடுக்காட்டாலும் , ஆன்லைன் பேமென்ட்  ரிக்கார்ட் ஆகி இருக்கும். இதெல்லாம் சின்ன விஷயம். விடுங்கக்கா! அக்கா!  வீட்டுக்குப் போனவுடன் மறக்காமல் கேஸ் ட்யுபை மாத்துங்க. உங்களுக்கு முடியாவிட்டால், என்னை கூப்பிடுங்க. நான் வந்து மாற்றித் தரேன்." என்றதும், வள்ளிமயில் தன்  அறியாமை நினைத்து வெட்கினாலும்,  சுகன்யாவின்  நடைமுறை அறிவைப் புரிந்து, மகிழ்ச்சியடைந்தாள்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்