ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

Su.tha Arivalagan
Jan 28, 2026,05:49 PM IST

டில்லி : காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை, திமுக எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி டில்லியில் இன்று திடீரென சந்தித்து பேசி உள்ளார். இது தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த திடீர் சந்திப்பு எதற்காக, இதன் பின்னணியில் நடக்கும் அரசியல் நகர்வுகள் என்ன என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


தமிழக அரசியலில் காங்கிரஸ்- திமுக இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று டில்லியில் ராகுல் காந்தியும், கனிமொழியும் சந்தித்து பேசி உள்ளார்கள். இந்த சந்திப்பின் போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.  ஆனால் அது மட்டும் காரணம் கிடையாதாம். இதற்கு பின்னால் திமுக.,வின் மிகப் பெரிய, பலமுனை அரசியல் காய் நகர்த்தும் வேலை தான் காரணமாக இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.




கனிமொழி, டில்லியில் திமுக.,வின் முகமாக பார்க்கப்பட்டாலும், தமிழக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரசுடன் கூட்டணி மற்றும் தொகுதிகள் பேசி முடித்தது என்னவோ முதல்வரின் மருமகன் சபரீசன் தான் என சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்திலும் அரசியல் செய்ய விடுவதில்லை. இப்போது டில்லியிலும் அரசியல் செய்ய விடாமல் தடுக்கிறீர்கள் என திமுக தலைமை மீது கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நீண்ட நாட்களாக அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல கனிமொழி பிறந்த நாளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து சொல்லியது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் அல்லது கன்னியாகுமரியில் உள்ள ஒரு தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என கிட்டதட்ட 200 பேர் விருப்பமனு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.


தமிழக அரசியலில் கனிமொழி கால் ஊன்றினால் கட்சியும் அவர் கைக்கு செல்லும் நிலை வந்து விடும். அதற்கு பாஜக.,வே துணையாக இருக்க வாய்ப்புள்ளது என திமுக நினைக்கிறது. இதற்கிடையில் கூட்டணியில் இருந்து உடையும் நிலையும் இருக்கும் காங்கிரசை தங்கள் பக்கம் இழுக்க தவெக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது உண்மை என்பது போலவும், காங்கிரசை திமுக பக்கம் வர அழைப்பு விடுக்கும் வகையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் இன்று பேசி உள்ளார். அப்படி காங்கிரஸ், தவெக பக்கம் சென்று விட்டால் திமுக.,வின் தோல்வி உறுதியாகி விடும். 


கனிமொழியின் கவனத்தை தமிழகம் பக்கம் திரும்ப விடாமல் செய்வதற்கு டில்லியில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்த வேண்டும். அதே சமயம் காங்கிரசும் கூட்டணியில் இருந்து போய் விடாமல் தடுக்க வேண்டும். இது போன்ற அனைத்து அரசியல் கோணங்களையும் அலசி ஆராய்ந்து தான், தவெக சார்பில் யாரும் சென்று ராகுல் காந்தியை சென்று சந்தித்து விடக் கூடாது என்பதற்காக கனிமொழியை அனுப்பி, ராகுலிடம் பேச சொல்லி இருக்கிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சை கேட்டு கூட்டணியை உடைக்கும் முடிவை எடுத்து விடாதீர்கள். தவெக., பக்கம் செல்லும் யோசனையை கை விடுங்கள் என பேசி காங்கிரசை சமாதானப்படுத்த தான் கனிமொழியின் இந்த சந்திப்பாம்.


காங்கிரஸ் கூட்டணி உடைவது இதுனால் தடுக்கப்படுவது மட்டுமல்ல, தனக்கு டில்லி அரசியலில் முக்கியத்துவம் கூடுவதாக கனிமொழிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி விடலாம் என்பதை கணக்கு போட்டு தான் கனிமொழி சென்று ராகுலை சந்தித்துள்ளார். மற்றபடி தொகுதி பங்கீடு பேச்சு எதுவும் கிடையாதாம். திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி பல மாதங்களுக்கு முன்பே சபரீசனின் டில்லி பயணத்தின் போதே பேசி பைனல் செய்யப்பட்டு விட்டதாம். இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பேசி வருவது எப்படியாவது பேசி, ஒன்றிரண்டு சீட்டுகளை கூடுதலாக பெற வேண்டும் என்பதற்காக தானாம்.