மூத்தவளாய் பிறந்தது அவள் குற்றமோ? .. சீதா (5)

Su.tha Arivalagan
Nov 20, 2025,04:23 PM IST

- கி. அனுராதா


அனைவரும் கூறிய பின்னரும் சீதாவின் தாய் அவளை படிக்க வைக்க சம்மதிக்கவில்லை. சீதாவின் மனதில் ஆயிரம் கேள்விகள். எத்தனை பேர் பெண் விடுதலைக்காகவும் அவர்களின் நலன்களுக்காகவும் போராட்டம் நடத்தினாலும் பெண்ணுக்கு வீட்டில் எப்பொழுதும் சுதந்திரம் கிடையாது என்பதை புரிந்துக் கொண்டாள். அந்தோ பரிதாபம்! மூத்தவளாய் பிறந்தது அவள் குற்றமோ! 


லஷ்மி இல்லாத வீட்டில் சரஸ்வதிக்கு எப்படி இடம் இருக்கும் என்று நினைத்தாள். இலட்சியத்தை அடைய ஒரு படி கூட ஏற முடியவில்லையே என்று தன்னைத் தானே அழித்துக் கொள்ள தயாரானாள். சாப்பிட முடியவில்லை, உறங்க முடியவில்லை நடைப்பிணமாய் திரிந்தாள்.  பள்ளி திறந்தது. தன் ஒத்த வயதுடைய பெண்கள் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைத்தனர்.  ஆசிரியர்கள் சீதாவை உயர பேசும் போது மற்ற மாணவிகளை உதாசீனமாக பேசினர். இப்பொழுது அவர்கள் சீதாவை பழி வாங்குவதாய் நினைத்து கொண்டு அவள் முன் அவளாய் இழிவாய் பேசினர். வெந்த புண்ணில் வேல் கொண்டு யாரோ ஒருவர் எறிவது போல் இருந்தது.  




கண்களில் நீர் பெருகியது. மனதோ எண்ணற்ற அலைகளாய் கேள்விகள் எழுந்தது. இதற்கா இவ்வளவு போராட்டம். இத்தனை கஷ்டப்பட்டு உழைத்து இராப்பகலாய் படித்தேன். அந்தோ பூமி பிளந்து என்னை உள்ளே இழுத்து செல்லாதா? இனி என் எதிர்காலம் என்ன? திருமணம் முடிந்து அடுப்படியில் வாழ்வு முடிந்து விடுமோ. ஐயோ!  பாரதியே, ஏன் எழுதினாய்? நான் ஏன் படித்தேன்? " பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று எழுதினாயே நான் எந்த பட்டத்தை ஆள்வது? என்று குமுறினாள்.  பள்ளியின் பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொண்டு நேரம் இனி அவ்வளவுதான். கல்வி என்ற எட்டாக்கனி புளிப்பாகி போனது என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.  


நிர்மலா சிஸ்டர் சீதாவை அழைத்து, கலங்காதே சீதா உன் அம்மா திருமணம் செய்யட்டும் , நாங்கள் அவர்கள் வீட்டாரை அணுகி உன் படிப்புக்கு ஏற்பாடு செய்கின்றோம் என்றார். இருண்ட வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டார்கள். சீதாவும் அப்பாவியாய் நம்பினாள்.  


ஒரு வெள்ளிக்கிழமை அன்று சீதா கோவில் சென்றாள். அங்குள்ள குழுவின் தலைவர் சீதாவின் தாயாரை அணுகி , நான் சொல்வதை கேளுங்கள்.  உங்கள் முடிவு சரியே. ஆனால் காலம் ஒரு வேளை மாறாக மாறி அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அவள் என்ன செய்வாள்? பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பாள்? யார் காப்பாற்றுவார்கள்? நீயா, ஏதேனும் படிப்பு இருந்தாலோ அல்லது ஏதாவது வேலை தெரிந்தாலோ அவள் பிழைத்துக் கொள்ளும் வழிக் கிடைக்கும். ஏதோ எனக்கு தெரிந்த்து கூறினேன் என்றார். அதை அனைவரும் ஆமோதித்தனர். 


தற்போதைய நிலையில் கணினி தான் சிறந்த வழி என்று அடிப்படை கணிணி மையம் என்று இலவசமாக கற்றுத்தரும் மையத்தில் சேர்த்தார்கள்.  ஏதோ ஒரு வகையில் திருப்தி கிடைத்த சீதா எப்பொழுதும் போல படிக்க ஆரம்பித்தாள். 700 மாணவர்களில் முதலாவதாக வந்தாள். அது ஒரு மத்திய அரசு நடத்தும் நிறுவனம். பதினைந்தே வயதான சீதா 700 மாணவர்கள் அதிலும் அனைவரும் வயதில் மூத்தவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றாள். புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று இந்த நிறுவனத்தின் முதல் இடம் பிடித்த நபரை பணிக்கு எடுக்கும் பழக்கம் கொண்டவர்கள். அதாவது கல்லூரியில் placement என்று கூறுவார்களே அது போல்.   சீதாவின் மதிப்பெண்ணையும் அவளது வயதையும் அறிந்த அந்த நிறுவனம் அதிர்ச்சியும் இன்பமும் அடைந்தனர். 


இந்த வயதில் இவ்வளவு ஆர்வமா? அவளின் விலாசத்தினை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.  சீதாவின் தந்தையார் வரவேற்று அமர வைத்து பேசலானார்.  எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு  இது எங்கள் குடும்பத்துக்கு ஒத்து வராது என்றார். மீண்டும் சீதாவிற்கு பேரிடி விழுந்தது போல் இருந்தது. ஏன் என்னை இவ்வாறு செய்கின்றனர். என் வளர்ச்சியினை தடுக்கின்றனர். என்ன ஒத்து வராது என்று தலைமை நிர்வாகி கேட்டார். அதற்கு சீதாவின் தந்தை என்ன பதில் கூறினார்? அது என்ன ஒத்து வராத பணி என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம் .


(தொடரும்)


(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)