சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
தவெக கட்சியைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவை, நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது தவெக அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வைத்து, தவெக அரசை கவிழ்ப்பதற்காக செந்தில் பாலாஜி தரப்பில் பேரம் பேசப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சட்டவிரோத பேரம் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செந்தில் பாலாஜி மீது காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
முன்ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்:
செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்த வழக்கிற்கும் தனக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை; அரசியல் ரீதியாகத் தன் பெயரைக் கெடுப்பதற்காகவே இந்தப் புகார் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும் மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு அவர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகததால் அடுத்த கட்டமாக அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும், இன்றும் தொடர்ந்து அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்பதால், நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த அரசியல் உலகமும் உற்று நோக்கி வருகிறது.