செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ-விடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
வழக்கின் பின்னணி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜா, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 29 அன்று ஒரு புகார் அளித்தார். அதில், சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக (தவெக கொறடா உத்தரவுக்கு எதிராக) வாக்களிக்க தனக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இதற்கு உடன்பட மறுத்ததால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலை மையமாகக் கொண்டு குதிரை பேரத் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஐடிபிஎஸ் நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக்குமார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லுக்-அவுட் நோட்டீஸ் மற்றும் போலீஸ் சம்மன்:
இதனைத் தொடர்ந்து, போலீசார் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரையும் ஜூலை 6-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பினர். மேலும், அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, சென்னை மாநகரக் காவல் துறை சார்பில் 'லுக்-அவுட்' (Look-out Circular) நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் சம்மனில் குறிப்பிட்டது போல் இன்று செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அடுத்த கட்டமாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
நீதிபதி மாற்றம்:
இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு அஞ்சி, அசோக்குமார் மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த முன்ஜாமீன் வழக்குகளானது தற்பொழுது வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு நீதிபதியான ஜெ. இளந்திரையன் அமர்வுக்கு இந்த முன்ஜாமீன் மனுக்கள் மாற்றப்பட்டு, விசாரணைக்கு வரவுள்ளன.
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் சுமார் ரூ.180 கோடி வரை குதிரை பேரத்திற்காக ஒதுக்கப்பட்டதாகப் போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.