கண் கண்ணாடி – கலாவின் பயணம்

Su.tha Arivalagan
Feb 19, 2026,03:42 PM IST

- ஷீலா ராஜன்


கலா தனது அப்பாவுடன் இருசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தாள். திடீரென ஒரு மாடு குறுக்கே வந்தது. வண்டி தவறி இருவரும் கீழே விழுந்தார்கள். சிறிய காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.


அங்கு பரிசோதித்த மருத்துவர், “கலாவின் காதின் பின்னால் சிறிய பாதிப்பு உள்ளது. கண் மருத்துவரை பார்க்கலாம்,” என்றார். கண் பரிசோதனையில், பார்வை நரம்பில் சிக்கல் இருக்கலாம், பார்வை இழப்பு கூட வரலாம் என்று சொன்னார்கள். “கடவுள் அருள் இருந்தால் கண்ணாடி போட்டால் சரியாகும்,” என்ற வார்த்தை குடும்பத்தையே பதற வைத்தது.


சில நாட்கள் சிகிச்சை நடந்தது. கண்களில் இருந்த தூசி அகற்றப்பட்டது. கட்டு போடப்பட்டது. அந்த நாட்கள் கலாவுக்கு பயமாய் இருந்தது. அவள் அம்மா வேண்டாத தெய்வம் இல்லை என்று பிரார்த்தித்தார்.




இறுதியில் மருத்துவர் மீண்டும் பார்வைச் சோதனை செய்தார். “பார்வை இழப்பு இல்லை. தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியாது. கண்ணாடி போட்டால் சரியாகிவிடும்,” என்றார்.


அந்த செய்தி குடும்பத்துக்கு உயிர் ஊட்டியது. ஆனால் கலாவுக்கு கண்ணாடி போட விருப்பம் இல்லை. “என்னை கண்ணாடிக்காரி என்று கேலி செய்வார்கள்,” என்று அம்மாவுடன் வாதம் செய்தாள். கண்ணாடி அணிய மறுத்தாள்.


காலம் கடந்தது. கல்லூரியில் சேர வேண்டிய நாள் வந்தது. அங்கு விரிவுரையாளர் தெளிவாகச் சொன்னார்: “கண்ணாடியுடன் தான் வர வேண்டும். இல்லையெனில் படிப்பு சிரமமாகும்.”


அந்த வார்த்தை கலாவை சிந்திக்க வைத்தது. தன் எதிர்காலத்திற்காக கண்ணாடி அணிய முடிவு செய்தாள்.


அன்றிலிருந்து உலகம் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. படிப்பில் முன்னேறி, இளங்கலை பட்டமும் ஆசிரியர் பயிற்சியும் முடித்தாள்.  இன்று அவள் ஒரு ஆசிரியர். மாணவர்கள் அன்பாக “கண்ணாடி டீச்சர்” என்று அழைக்கிறார்கள். அதைப் பற்றி கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் ஜொலித்து நிற்கிறாள்.


கண்ணாடி அவளின் பார்வையை மட்டும் அல்ல, அவளின் வாழ்க்கையையும் தெளிவாக்கியது.