நூல் பல கல் (சிறுகதை)

Su.tha Arivalagan
Nov 20, 2025,01:27 PM IST

- ஆ.வ. உமாதேவி


ஒரு ஊரில் ஒரு அப்பா, அம்மா, மகன் இருந்தனர். மகனுக்கு எட்டு வயது. பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டிற்கு துறவி ஒருவர் வழக்கமாக விருந்து  சாப்பிட வருவார். 


ஒரு சமயம் தமிழ் புத்தாண்டு வந்தது. விருந்துக்கு வந்த துறவி, உணவு உண்டு சென்றபின் அவர்கள் வீட்டில் மேசை மீது வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. துறவி எடுத்து இருப்பாரோ என மகன் சொன்ன போது, அம்மாவும் அப்பாவும் நிச்சயமாக அவர் எடுத்திருக்க மாட்டார் என உறுதியாக கூறினர். நீண்ட இடைவெளிக்குப்பின்  சரஸ்வதி பூஜைக்கு மீண்டும் துறவி விருந்து சாப்பிட வந்தார். 


அப்போது அந்த மகன் ஐயா! சென்ற முறை நீங்கள் வந்து போன பின், எங்கள் வீட்டில் மேசை மேல் இருந்த பணம் காணாமல் போனது என்று கூறி விட்டான். அதற்கு, அந்த துறவி அலமாரியில் உள்ள திருக்குறள் புத்தகத்தை கொண்டு வா! என்று கூறினார். அவனும் கொண்டு வந்து கொடுத்தான். அப் புத்தகத்தை பிரி த்துப் பார்த்தபோது அதனுள் பணம் இருந்தது. சென்ற முறை நான் வந்தவுடன், என்னை அமர வைத்து மின்விசிறியை போட்டுவிட்டு, நீங்கள் சமையலறைக்குள் சென்று விட்டீர்கள். பணத்தாள்கள் காற்றுக்கு பறந்து கீழே விழுந்தன. நான் அதை எடுத்து திருக்குறள் புத்தகத்துக்குள் வைத்து விட்டு சென்றேன். 




திருக்குறளை வாசிக்க நீங்கள் அப் புத்தகத்தை எடுத்து இருந்தால், நான் வைத்த பணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுமார் 4 மாத காலமாக நீங்கள் அப்புத்தகத்தை தொடவில்லை என்று நினைக்கிறேன். நம் கவனத்தை சிதறடிக்கும் பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் நல்ல நூல்களை வாசித்தல் நம்மை பண்படுத்தும். 


அதுவும், எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை அள்ளித் தரும் திருக்குறளை வாசிப்போம். வாசித்தலை சுவாசிப்போம். புத்தகங்களை நேசிப்போம் என்று துறவி கூறினார். அன்று முதல் அக்குடும்பத்தினர் கைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்து, வாசித்தலில் ஈடுபட்டனர்.


(கதாசிரியர் ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)