Short Story: ஊன்றுகோல் சிறுகதை!

Su.tha Arivalagan
Jun 23, 2026,03:26 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


​அரசுப் பள்ளி ஆசிரியரான பரமசிவம் பிள்ளை, "பெற்ற பிள்ளைகளே முதுமையின் ஊன்றுகோல்" என்ற சமூக நம்பிக்கையை ஆழமாக நம்பினார். அதற்காகத் தன் பூர்வீக நிலத்தை விற்று, ஒரே மகன் கார்த்திக்கை அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக்கினார். 


ஆனால், அங்கே குடியேறிய கார்த்திக்கோ காலப்போக்கில் தன் பெற்றோரிடம் தன் தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வெறும் கடமைக்காக மட்டும் பேசினான். அவனது தாய்​ காமாட்சி முடக்குவாதத்தால் படுத்த படுக்கையானபோது, "வர முடியாது, பணம் அனுப்புகிறேன்" என்று கார்த்திக் பொறுப்பைத் தட்டிக்கழித்தான்;


தாயின் இறுதிச்சடங்கிற்குக்கூட விசாப் பிரச்சினையைக் காரணம் காட்டி அவன் வரவில்லை. மனைவியை இழந்த பரமசிவம் பிள்ளை முதுமையிலும் தனிமையிலும் சமைக்கக் கூட முடியாமல் தவித்தபோது, "பிள்ளையை நம்பி ஏமாந்தாரே" என்று ஊரே பரிதாபப்பட்டது.




​ஒரு நாள், வறுமையால் படிப்பை நிறுத்தவிருந்த நிலையில், முப்பது ஆண்டுகளுக்கு முன் பரமசிவம் பிள்ளையால் சொந்தப் பணத்தில் படிக்க வைக்கப்பட்ட ஏழை விவசாயியின் மகன் அன்பரசு அங்கு வந்தான். ஆசிரியரின் நிலையை அறிந்து கலங்கியவன், தன் கைகளால் உணவு ஊட்டி, "ஐயா, இனி எங்களோடு வந்துவிடுங்கள்" என்று அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


​அப்போது கார்த்திக் தன் தந்தையை போனில் அழைத்து, " நான் வீட்டை விற்று  விடப் போகிறேன். உங்களை நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன்." என்றான். பரமசிவம் பிள்ளை அமைதியாக, "இரத்த பந்தம் மட்டும்தான் ஊன்றுகோல் என்ற சமூக நம்பிக்கை எனக்குப் பொய்யாகிவிட்டது; ஆனால் அன்று நான் விதைத்த  கல்வி விதை இன்று அன்பரசு வடிவில் ஆலமரமாக நிற்கிறது, .


நான் இப்போது என் மகன் வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறேன். எனக்கு முதியோர் இல்லம் தேவையில்லை. உன் பணமும் எனக்கு  தேவையில்லை" என்று கூறிவிட்டு, உடைந்த ஊன்றுகோலைத் தேடாமல் ,அன்பரசு என்ற நிழல் மரத்தின் அடியில் நிம்மதி கண்டார்.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)