பரிவு

Su.tha Arivalagan
Apr 02, 2026,02:12 PM IST

- தி. மீரா


நாள் முழுவதும் வேலை அதிகம். கார்த்திக் மிகப் பொறுப்பான பதவியில் இருக்கிறான். நாளுக்கு நாள் வேலைப் பளு அதிகம். ஆனாலும் கவனத்துடன் அக்கறையாக வேலை செய்வது அவனது இயல்பு.


வீட்டைப் பொறுத்த வரை மனைவியே குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்து வருகிறாள். அவனுக்கு தொந்தரவு எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் இரவு நேரம் ஆனாலும் ஒரே மாதிரியாக அவளும் விழித்திருந்து அவனுக்கு உணவு பரிமாறி அன்று நடந்த நிகழ்வுகளை கூறுவாள். பாதிக் கேட்பான். பாதி சரியாக கேட்க மனமிருக்காது.


இப்படித்தான் நாட்கள் போய்க் கொண்டிருந்தன. ஒரு நாள் அவன் இரவு உணவு அருந்த உட்கார்ந்த பொழுது அவன் மனைவி சொன்னாள், தனக்கு  உடல்நிலை சரியில்லை யென்று. அவனும் அதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நாளை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு மருத்துவரிடம் சென்று வா என்றான். சரி என்று இவளும் கூறி படுத்து விட்டார்கள்.




மறுநாள் கார்த்திக் வேலைக்குப் போன இடத்தில் திடீரென்று மயங்கி விழுந்து விட்டான். உடனே அவனது மனைவிக்கு தகவல் கூற அவள் தான் முடியாத  நிலையிலும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனே சரி செய்தாள்.அவனுக்கு உடலும் சிறிது சரியானது. பிறகு மனைவி சொன்னாள் நான் நாளை மருத்துவரிடம் போய்க் கொள்கிறேன் என்று. அவன் சொன்னான் நான் விடுப்பு எடுத்துக் கூட்டிச் செல்கிறேன். பிறகு அடுத்த நாள் முழுவதும் மனைவியுடன் கூட இருந்தான். அவளது உணவை ரசித்து சாப்பிட்டான். எளிமையான ரசமும்‌ ருசித்தது.


குழந்தைகள் வந்தவுடன் நேரம் செலவழித்தான். குழந்தைகள் ஆசை ஆசையாக மாற்றி மாற்றி நிறைய செய்திகளைச் சொன்னார்கள்.பரிசுகளை காண்பித்தார்கள். விளையாடினார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.


ஒவ்வொன்றிலும் அவன் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறான் என்பது தெரிந்தது. நாள் முழுவதும் மன திருப்தியில் இருந்தான். அவர்கள் வீட்டு நாய் வேகமாக வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. அதனுடைய பாசத்தை ரசித்தான். இப்பொழுதுதான் பரிவு என்பதற்கான அர்த்தம் புரிந்தது. எதுவுமே இல்லத்தில் தான் தொடங்கப்பட வேண்டும். அன்போ கருணையோ வெளிப்படுத்தாமல் காட்டப்படாது இருந்தால் நல்லதல்ல. அவசரமான உலகத்திலே நாமும் எதற்காகவோ ஓடுகிறோம். அர்த்தமில்லாமல் வாழ்கிறோம். ஆனால் அன்றாடம் நமது இல்லத்திலேயே கருணையோடு பாசத்தோடு பரிவோடு சிறிய சிறிய விடயங்களில் அக்கறையோடு இருப்பது நிறைவான வாழ்க்கைத் தரும்.


ஓடி ஓடி வேலை செய்து உடலைக் கெடுக்காமல் இருப்பது நல்லது. ஒரு நல்ல திட்டமிடலும் நேரம் ஒதுக்கி மனிதர்களை மதித்தலும் பரிவின் எச்சமே. வரும் தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டியது.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)