தாய்மையின் விலை!

Su.tha Arivalagan
Nov 27, 2026,04:54 PM IST

- சியாமாளா வெங்கட்ராமன்


காலை 10 மணி அந்த அலுவலகமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. டக் டக் என்ற பூட்ஸ் ஒலி கேட்க அனைவரும் வாசல் பக்கம் பார்க்க கிருஷ்ணகுமார் புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அனைவரும் குட் மார்னிங் என்று கூற அதை ஏற்றுக்கொண்டு தன் அறைக்கு சென்றான். வேலை நிமித்தம் யூ எஸ் சென்று திரும்பி இருந்தான். அறைக்குச் சென்றதும் இன்டர்காமில் செகரட்டரி பூஜாவை அழைத்தான்.


எக்ஸ்க்யூஸ் மீ என்று உள்ளே நுழைந்தாள் பூஜா. நான் இல்லாத பொழுது என்னை காண்டாக்ட் செய்த விஜிபி யாரவது உண்டா என்றான். உங்கள் குடும்ப டாக்டர் ஷர்மா வந்திருந்தார். 


போனில் ஷர்மாவிடம் காண்டாக்ட் செய்தார்,


ஷர்மா நீங்கள் சொன்ன கண்டிஷன் படி ஒரு பெண் வந்திருக்கிறாள். சரி இன்று மாலை 5 மணிக்கு நாம் சந்திக்கும் ஜிம்கானா கிளப்பிற்கு வருகிறேன். தேங்க்யூ என்று கூறி போனை துண்டித்தான்.


மாலையில் டாக்டரை சந்தித்தான். டாக்டர் நேராக விஷயத்திற்கு வந்தார். அவள் அருகில் உள்ள கோவிலில் இருக்கிறாள். அவள் பெற்றோருடன் பொன்னேரியில் வசிக்கிறாள். மிகவும் ஏழை. அவள் அம்மா ஒரு ஹார்ட் பேஷண்ட் அப்பா விற்கு கிட்னி மாற்ற வேண்டும் . அவர்களுக்கு ஒரே பெண், உங்களுக்காக எல்லோரிடமும் திருமணத்திற்கு பெண் சொல்லியிருந்தேன், உங்க கண்டிஷன் படி வந்தவள்தான் இந்த பெண் , விசாரித்ததில் பிறவியிலேயே இவளுக்கு கர்ப்பப்பை கிடையாது, எனவே நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என நினைக்கிறேன் அந்தப் பெண்ணை பார்த்து ஓகே சொன்னா நான் மற்றதை பார்த்துக் கொள்கிறேன்.


கிருஷ்ணகுமார் அந்தப் பெண்ணை வரச் சொல்லுங்கள் பார்க்கிறேன் என்றான், கிருஷ்ணகுமார் அந்த பெண்ணை பார்த்ததும் மனதிற்கு பிடித்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாள்




தன் அந்தஸ்திற்கு ஏற்பபடி மாற்றலாம் என்று நினைத்தான், ஷர்மாவிடம் நான் அவளுடன் பேச வேண்டுமென்றார்


கிருஷ்ணகுமார், உன்னைப் பற்றி கூறு.


என் பெயர் சுப்ரியா பிளஸ் 2 படித்து இருக்கிறேன். பெற்றோர் தவிர உறவு கிடையாது. அம்மா ஹார்ட் பேஷண்ட் .அப்பாவிற்கு கிட்னி மாற்ற வேண்டும். எனவே திருமணம் செய்ய ஒப்புக்கொண்டேன்.


என்னைப் பற்றி தெரிந்து கொள், திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. என் மனைவி ஒரு வருடங்களுக்கு முன் கார் விபத்தில் சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டாள், அப்போது என் குழந்தைக்கு ஒரு வயது. எனவே என் மாமியார் மாமனார் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு வயதாகியதால் வளர்ப்பது கஷ்டம். என் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்தால் அவள் என் முதல் குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ள மாட்டாள் என்று தான் இந்த கண்டிஷன்.


உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் குழந்தையை உன் குழந்தை என்று சொல்லி தான் வளர்க்க வேண்டும். என்னிடம் தேவையான பணம் இருக்கின்றது. கடைசிவரை உன் பெற்றோரையும் உன்னையும் காப்பாற்றுவேன். சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள் என்று கூறி முடித்தார். 


சுப்ரியா, உங்கள் குழந்தையை நான் என் குழந்தையாக வளர்ப்பேன்.


கிருஷ்ணகுமார் ஷர்மாவை அழைத்தார். தன் விருப்பத்தை கூறினார். அடுத்த வாரமே திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் சுப்ரியா தன் குழந்தை போல் கண்ணனை வளர்க்க ஆரம்பித்தாள். வீட்டையும் கிருஷ்ணகுமாரையும் நன்றாக பார்த்துக் கொண்டாள்.


அவளுடைய பெற்றோரை தனி வீடு பார்த்து தன் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும்படி செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தான். ஆனால் அவ்வப்பொழுது முதல் மனைவியின் நினைவு வந்து சுப்ரியாவின் வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பான்.


அவள் அதைகோபப்படாமல் ஏற்றுக்கொள்வாள் , கண்ணனை படிப்பில் குணத்தில் சிறந்தவனாக வளர்த்தாள், பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள், கண்ணனும் நன்றாக படித்து மேற்படிப்பிற்கு யூ கே, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சேர்ந்தான். தினமும் சுப்ரியாவிடம் மணி கணக்கில் பேசுவான், கன்றின் குரல் கேட்ட தாய் பசு போல் கண்ணனின் குரலில் மகிழ்ந்து போவாள். 


இந்த நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் பொழுது மயங்கி விழுந்தாள். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது. அவ்வப்போது அவளை வார்த்தையால் சுட்டவன் அவள் இறந்ததும் தனிமை அவனை வாட்டவே அந்த வீட்டை விட்டு ரிட்டயர்மென்ட் ஹோமிற்கு செல்ல முடிவெடுத்தான்.


வீட்டை விற்க ஏற்பாடு செய்தான். சுப்ரியாவின் அறையில் இருந்த அவளுடைய பொருட்கள் எல்லாம் ஏழை மக்களுக்கு கொடுத்தான். அவள் திருமணம் ஆகி வந்தபோது எடுத்து வந்த அவளுடைய பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான். அதில் ஒரு ஆல்பம் இருந்தது. அதில் குழந்தை கண்ணனின் போட்டோ அதில் இருந்தது. அதன் நடுவே ஒரு பிரிக்கப்படாத கவர் ஒன்று இவன் பெயருக்கு இருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் அந்த கவரை பிரித்து படிக்க ஆரம்பித்தான். 


சுப்ரியா அழகான கையெழுத்தில் அன்பான கணவர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு உங்களிடம் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டதற்கு மன்னிக்கவும். பிறவியிலேயே எனக்கு கர்ப்பப்பை இல்லை என்று சொன்னது பொய். உங்கள் கண்டிஷன் தெரிந்து அதற்காக நான் டாக்டர் ஷர்மாவின் உதவியால் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை எடுத்துக் கொண்டேன். காரணம் பெற்றோர் இருவரும் நோயாளிகள் இதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது.


என் அம்மாவை டாக்டர் ஷர்மாவிடம் காண்பிப்பதற்கு சென்றிருந்தேன். ஒரு தரகரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் தனிமையில் என் நிலைமையை கூறி என்னை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கச் சொன்னேன். அவர் உங்கள் கண்டிஷனை சொன்னார். நான் அவரிடம் என் கர்ப்பப்பை எடுத்துக் கொள்வதற்கு தயார். அதற்கு உதவும்படி கூறினேன். முதலில் அவர் மறுத்தார். பின்பு என் அழுகையை பார்த்து உதவி செய்ய ஒத்துக் கொண்டார். என் சினேகிதியின் கல்யாணத்திற்கு வெளியூர் போவதாக சொல்லிவிட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்து ஆபரேஷன் செய்து கொண்டேன். இது எனக்கும் சர்மாவுக்கு மட்டுமே தெரியும்.


என்னை எப்படியாவது உங்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவதாக வாக்கு கொடுத்தார். அதேபோல் திருமணம் செய்து வைத்தார். அவர் செய்த நன்றியை நான் மறவேன். நீங்கள் செய்த உதவியை நான் இறக்கும் வரை மறக்க மாட்டேன். உங்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதற்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


இக்கடிதம் கிடைக்கும்பொழுது நான் உயிருடன் இருந்தால் நேரில் காலில் விழுந்து என் தவறுக்கு மன்னிப்பு கேட்பேன். நீங்கள் கண்ணன் செய்யும் தவறுகளை கேட்கவில்லை என்பதால் தாயாக இருக்கும் தகுதி இருந்தால் தானே உனக்கு தெரியும் என்று கூறும்பொழுது எனக்கு நெஞ்சில் வலிக்கும். ஆனால் அதை கண்ணனுக்காக சிரித்து கொண்டு ஏற்றேன், சில நேரங்களில் உண்மையை உடைத்து சொல்ல நினைப்பேன். ஆனால் இரண்டு குடும்பங்களின் சந்தோஷம் உடைந்து விடுமே என்று மௌனம் சாதிப்பேன்.


என்றாவது ஒருநாள் உண்மை உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இக்கடிதத்தை எழுதினேன். மறுபடியும் நான் சொன்ன பொய்க்காக என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .இப்படிக்கு சுப்ரியா.


கடிதத்தை படித்ததும் விக்கி விக்கி அழுதான். நான் எப்படிப்பட்ட பாவி அவளை வார்த்தையால் சுட்டு இருக்கிறேன், அவள் என் கண்ணனிடம் காட்டிய பாசமும் அவள பெற்றோர்களுக்கு செய்த தியாகமும் நான் கொடுத்த பணத்தின் முன் எம்மாத்திரம்?


சுப்ரியா என்னை நீ மன்னிக்க வேண்டும் உன் தாய்மைக்கு விலை ஏது? என்று அவள் படத்தின் முன் கண்ணீர் மல்க நின்றான் கிருஷ்ணகுமார்!!!


(ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரான சியாமளா வெங்கட்ராமன், நெய்வேலி என்.எல்.சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் மற்றும் சமையல் குறிப்புகளை எழுதிவரும் இவர், எழுதிய 'யாதுமாகி நின்றாள்' சிறுகதைக்காக 'தமிழ்த்தாய்' விருதைப் பெற்றுள்ளார். மேலும், சென்னை ராமபுரத்தில் ஸ்ரீ விக்னேஸ்வரா லேடீஸ் கிளப்பைத் தொடங்கி அதன் தலைவியாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சமூகத் தொண்டு செய்து வருகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்)