"எப்போ தான் சார் பேசுவீங்க?"...கேள்விகளால் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை : தமிழகத்தில் நடக்கும் பல விவகாரங்களில் வாய் திறக்காமல் இருக்கும் தவெக தலைவர் விஜய், தற்போது அவர் நடித்த ஜனநாயகன் படத்தின் ரிலீசுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் விவகாரத்தில் கூட வாய் திறக்காமல் மெளனமாக இருந்து வருவது சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் இடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலரும் பலவிதமான கேள்விகளை விஜய்க்கு முன் வைத்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்களிடம் ஆதரவு சேகரிப்பது, மக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்ப்பது என இருக்கின்றன. ஆனால் தமிழக அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தவெக கட்சி என்ன செய்கிறதே என தெரியாமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட செய்தியாளர்களை சந்தித்து, அவர்களை பற்றிய அப்டேட்களை வெளியிடுவதில்லை.
இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்பட்டு, பொங்கலுக்கு ரிலீசாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்று கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஜனநாயகன் படம் ஏற்கனவே அறிக்கப்பட்ட ஜனவரி 09ம் தேதி மட்டுமல்ல, இந்த வருட பொங்கலுக்கே ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகி விட்டது. ஆனால் இப்போதும் கூட ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து, அதை வைத்து பலரும் அரசியல் செய்து கொண்டிருக்கையில் விஜய் மட்டும் அமைதி காப்பதும், இந்த விவகாரத்திற்கும் தங்களுக்கும்ய சம்பந்தமே இல்லை என்பது போல், தவெக.,வின் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிடுவதும் நெட்டிசன்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
" தமிழகத்தில் எத்தனையோ போராட்டம், மக்கள் பிரச்சனைகள் நடக்கிறது, முக்கியமான கோர்ட் தீர்ப்பு வருகிறது. ஆனால் இது எதற்குமே கருத்து சொல்லவில்லை. இப்போது ஜவநாயகன் பட சிக்கல் பற்றி உங்களை தவிர அனைவரும் பேசுகிறார்கள். நீங்கள் எப்போ தான் சார் பேசுவீங்க? உங்களுக்காக கூட வாய் திறக்காத நீங்களா நாளை பதவிக்கு வந்தால் மக்களுக்காக பேச போகிறீர்கள்?", "விஜய் இந்தியாவில் தான் இருக்கிறாரா? அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதாவது அவருக்கு தெரியுமா?", "அரசியல் கட்சி தலைவராக அரசியல் செய்வதற்கும், உங்களின் எதிரிகள் என சொல்லிக் கொள்ளும் பாஜக மற்றும் திமுக.,வை விமர்சிப்பதற்கும் தினம் தினம் எத்தனை விஷயங்கள் நடக்கிறது? இதற்கு கூட பேச மாட்டீர்கள் என்றால், பிறகு எப்போது தான் பேசுவீர்கள்? நீங்கள் எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள்?" இப்படி பலவிதமான கேள்விகளால் விஜய்யை துளைத்து எடுத்து வருகிறார்கள்.
விர்சுவல் வாரியர்கள் பலரே ஜனநாயகன் பிரச்சனைக்கு கூட விஜய் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொரு புறம், " தேர்தலில் தனித்துப் போட்டியா, கூட்டணியா, யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறீர்கள், உங்கள் கட்சியின் சின்னம் என்ன இது எதையுமே தெளிவுபடுத்தாமல் தேர்தல் அறிக்கை தயாரிக்க மட்டும் குழு அமைத்திருக்கிறீர்கள். நிஜமாவே நீங்க சீரியசா தான் கட்சி நடத்துறீங்களா இல்லை சிரிப்பு போலீசா?" என விமர்சித்து வருகின்றனர்.