தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?
- ஸ்வர்ணலட்சுமி
"காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்...."
இது வெறும் சினிமாப் பாட்டு மட்டுமல் ஃபிரண்ட்ஸ்.. அழகியல் அம்சமும் கூட.
பெண்களுக்கு பட்டுப் புடவை என்றாலே எப்போதும் அலாதி பிரியம் தானே ஃபிரண்ட்ஸ். அதுவும் காஞ்சி பட்டு என்றால் சொல்லவா வேண்டும். பாரம்பரிய திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் என்ற எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் பட்டுப் புடவை கட்டுவது பெண்களுக்கு அழகிற்கு அழகை கூட்டும் விஷயம் தானே. எத்தனை விதமான வகைகளில் புடவைகள் வந்திருந்தாலும் பட்டுப் புடவைக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது.
பாரம்பரிய மதிப்பு:
நம் கலாச்சாரத்தில் பட்டுப்புடவை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல..இது ஒரு பாரம்பரியத்தின் அடையாளம். தலைமுறை தலைமுறையாக விசேஷங்களின் போது விதவிதமான டிசைன்களில், விதவிதமான வண்ணங்களில், அழகழகான பட்டுப் புடவை அணிவது பெண்களின் மனதிற்கும் மிகவும் சந்தோஷம் தரும் விஷயம் தானே.
இன்றைய நவீன காலத்தில் பாரம்பரிய முறையோடு சேர்ந்து ட்ரெண்டிங் ஆன பிளவுஸ் டிசைன்கள் மற்றும் லேசான எடை கொண்ட சாஃப்ட் சில்க் பட்டுப் புடவைகள் நடைமுறையில் பெண்கள் அதிகம் விரும்பி தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.
பெண்களுக்கு பட்டுப் புடவைகள் மிகவும் பிடிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?
பாரம்பரிய பெருமை:
பட்டுப் புடவை இந்திய பெண்களின் குறிப்பாக தமிழ் பெண்களின் பாரம்பரியம் மற்றும் அழகின் அடையாளமாக கருதப்படுகிறது. பட்டுப் புடவை கட்டும் போது பெண்களுக்கு ஒரு தனித்துவமான அழகும், கம்பீரமும், பாரம்பரிய தோற்றமும் இயல்பாகவே வந்து விடுகிறது இல்லையா?
நேர்மறை ஆற்றல்:
ஆன்மீக ரீதியாகவும் பட்டு ஆடைகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, கல்யாணங்களில் மற்றும் விசேஷ நாட்களில் நேர்மறை ஆற்றலை (positive energy & vibe)ஈர்ப்பதற்காகவே பட்டுப் புடவைகளை பெண்கள் விரும்பி அணிவதை பார்க்கிறோம்.
கோவில்களுக்கு செல்லும் பொழுதும் பட்டுப்புடவை அணிவதனால் அங்கு உள்ள நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைக்கும் சக்தி அதிகம் பட்டுப் புடவைகளுக்கு உண்டு.எனவே, மனதில் ஒரு பரவசமும், மகிழ்ச்சியும், நம் வேண்டுதல்களை இறைவனிடம் ஒப்படைத்து விட்டோம் இனி அவர் பார்த்துக் கொள்வார் எனும் மன நிறைவு ஏற்படுகிறது.
பெரும்பாலான இசைக்கலைஞர்கள் தாங்கள் கச்சேரிக்கு செல்லும் பொழுது பட்டு உடுத்தி செல்வதை நாம் பார்த்திருக்கிறோம் இல்லையா? அவர்கள் பட்டு புடவைக்கு என்று தனித்துவமும், முக்கியத்துவமும், முதன்மை தன்மையும் அளிக்கிறார்கள்.
ராணி மாதிரி லுக் (Royal look):
பெண்கள் பட்டுப் புடவை அணியும் பொழுது ஒரு தனித்துவமான, ராணி மாதிரியான தோற்றமும், (Royal look) கம்பீரமும், ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போல மனதில் ஒரு பூரிப்பும் ஏற்படுகிறது.
திருமணங்களில் மணப்பெண்கள் விதவிதமான பட்டுப்புடவைகளும், அதற்கு ஏற்றார் போல் நகைகளும் அணிவதால் அவர்கள் மகாராணிகளை போல ஜொலி ஜொலிக்கிறார்கள். அவர்கள் தோழிகளும், திருமணத்திற்கு வரும் அனைத்து உறவினர்களும், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பட்டு உடுத்தி அழகிய வண்ணத்து பூச்சிகள் போல் அங்கும் இங்கும் உலவுவதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சில வீடுகளில் பரம்பரை பரம்பரையாக பட்டுப் புடவைகள் பொக்கிஷமாக இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
தூய பட்டு காஞ்சிப்பட்டு:
பட்டு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காஞ்சிபுரம் பட்டு புடவை தானே. ஒரு உண்மையான பட்டு சேலை என்பது மல்பெரி பட்டு நூலால் உண்மையான ஜரிகையுடன் தங்கம் அல்லது வெள்ளி சுற்றப்பட்ட நூல் நெய்யப்படுகிறது. பொதுவாக 500 கிராம் முதல் ஆயிரம் கிராம் வரை எடை கொண்டது.
மேலும் இதற்கு பட்டு முத்திரை - (silk mark) சில்க் மார்க் அல்லது புவியியல் குறியீடு (GI -Geographical Indication) ஜியோகிராபிகல் இண்டிகேஷன் சான்றிதழை கொண்டிருக்கும். உண்மையான பட்டுச்சேலையின் விலை ரூ.8000 முதல் லட்சக்கணக்கில் மார்க்கெட்களில் விற்கப்படுகிறது. காஞ்சிப்பட்டு பிற பட்டு சேலைகளைவிட கனமாக இருக்கும். ஏனெனில்,நான்கு இழைகள் கொண்டு நெய்யப் படுவதே இதன் வலிமையின் ரகசியம். 100% மல்பெரிப்பட்டில் வெள்ளிச் ஜரிகையில் தங்க முலாம் போடப்படுவதனால் காஞ்சி பட்டு மற்ற பட்டுப் புடவைகளை விட விலை கூடுதலாக உள்ளது.
காஞ்சிபுரம் பட்டு புடவை மட்டுமல்லாமல் விதவிதமான பட்டுப்புடவைகள் கிடைக்கின்றன. போச்சம்பள்ளி பட்டு, கோயம்புத்தூர் பட்டு, சேலம் பட்டு, ஆரணி பட்டு, திரிபுவனம் பட்டு, தர்மாவரம் பட்டு, கும்பகோணம் பட்டு, தென்காசி பட்டு, செட்டிநாடு பட்டு, திருநெல்வேலி பட்டு என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடேங்கப்பா பட்டுப்புடவைல இவ்வளவு மகிமையா! என்ன பிரண்ட்ஸ் எங்க கிளம்பிட்டீங்க? பட்டுப் புடவை வாங்க தானே... என்ஜாய்.. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.