மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,04:12 PM IST

- ந.லட்சுமி


மன்னார்குடி: மாதவிடாயின்போது பெண்கள் சந்திக்கும் அவஸ்தையை சொல்லி மாளாது. அத்தனை கஷ்டம். பிரசவத்தின்போது சந்திக்கும் வலிகளைப் போலவே மாதா மாதம் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளுக்கு எளிய பாரம்பரிய வைத்தியங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா.


1. மாதவிடாய் வலி குறைவதற்கு: சுக்கு மற்றும் வெல்லம் கஷாயம் குடித்தால் வலி குறையும்.




வெந்தயம், சோம்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் வெறும் வானலியில் நன்கு சிவக்க வறுத்த பிறகு சிறிது சர்க்கரை சேர்த்து வறுத்து சர்க்கரை உருகி கலர் மாறும் பொழுது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளராக சுருங்கிய பிறகு அப்படியே குடிக்கலாம் அல்லது சிறிது நாட்டுச்சக்கரை சேர்த்து குடிக்கலாம். இதற்கு 'கருக்கு" என்று பெயர்


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு, இடுப்பு வலி குறையும்.


2. உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: நெல்லிக்காய் சாறு  மற்றும் தேன் கலந்து ஒரு டம்ளர் இளம் வெந்நீரோடு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் தொற்றுகள் வராது.( பிரிசர்வேட்டிவ் சேர்காத நெல்லிக்காய் சாறு வாங்கி வைத்துக் கொண்டு அதில் தேன் கலந்தும் குடிக்கலாம்)


3. ரத்தசோகை நீங்குவதற்கு: பேரீச்சம்பழம் 2 - 3 தினமும் பால் உடன் சாப்பிடவும்.

 

கருப்பு உலர் திராட்சையை நன்கு கழிவி விட்டு வெந்நீரில் இரவு ஊற வைத்து காலையில் திராட்சையை சாப்பிட்டு விட்டு ஊறிய தண்ணீரையும் குடித்து விட வேண்டும்.


4. முகப்பரு நீங்குவதற்கு:  கஸ்தூரி மஞ்சள் தூளில்,  ரோஜா நீர் கலந்து( ரோஸ் வாட்டர்) முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடவும்


5. முடி உதிர்வை தடுக்க: வெந்தய ஊறல் நீரை தலையில் தடவி வைத்திருந்து தண்ணீரில் அலசிவிட வேண்டும்.

 

செக்கு தேங்காய் எண்ணெயில், வெந்தயம், வெட்டிவேர், ஆவாரம் பூ, கருஞ்சீரகம், பூலாங்கிழங்கு, காய்ந்த நெல்லிவற்றல், விதை நீக்கிய கடுக்காய் தட்டியது இவை அனைத்தையும் லேசா கல்லுரலில் போட்டு இடித்து ஒரு மெல்லிய  துணியில் அழுத்தம் இல்லாமல் லேசாக மூட்டையாகக் கட்டி தேங்காய் எண்ணெயில் 48 நாட்கள் கண்ணாடி சீசாவில் ஊற வைத்து( இடை இடையே மூட்டையை மரக்கரண்டியால் பிரட்டி விட வேண்டும்) ஒரு வாரம் சூரிய ஸ்புடம் போட்டு( வெயிலில் வைத்து) பயன்படுத்தினால் நாளாவட்டத்தில் முடி உதிர்வு குறைந்து இருப்பதை நாம் கண்கூடாகக் காண முடியும்.


6. கர்ப்பப்பை பலம் பெற:  


(1.) எள் உருண்டை வாரம் 2 முறை எடுத்துக்கொள்ளவும்.

(2.) உளுந்தங்களி அல்லது உளுந்தங்கஞ்சி வாரம் இரு முறை எடுத்துக் கொள்ளவும்.

(3.) வெந்தயப் பொடி கோடை காலத்தில் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து உடனே குடித்து விட வேண்டும்.

 

மழைக்காலத்தில் ஒரு ஸ்பூன் வெந்நீரில் கலந்து  உடனே குடித்து விட வேண்டும். சிறிது நேரம் வைத்திருந்தால் பொத, பொத வென்று ஊறி கூழ் மாதிரி ஆகிவிடும். குடிக்க முடியாது.


7. உடல் சோர்வு நீங்க:  தினந்தோறும் நெல்லிக்காய் லேகியம்  சுண்டைக்காய் அளவு உருட்டி சாப்பிட வேண்டும்.


8. ஹார்மோன் சமநிலையாக:  சீரகம் இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் அல்லது அப்படியேவே வடிகட்டிக் குடிக்கவும்.


9. நெஞ்சாங் கூட்டு வலி நீங்க: சூடான பால் மற்றும்  சிறிது மஞ்சள் தூள் கலந்து இரவில் குடிக்கவும். பீனிசம் என்ற சைனஸ் கோளாறு இந்தப் பால் கலவையால் நீங்கும். தேவை என்றால் சிறிது மிளகு பொடி சேர்த்துக் கொள்ளலாம்.


 10. தூக்கமின்மைக்கு: பால் மற்றும்  ஜாதிக்காய் சிட்டிகை கலந்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது சிறிது ஊற வைத்து அரைத்த கசகசாவுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.  நன்கு தூக்கம் வரும்.

 

நம் பாரம்பரிய  வீட்டு வைத்திய முறையை (பாட்டி வைத்தியத்தை) பயன்படுத்தி எல்லோரும் பயன் பெறுங்கள்.


(ந.லட்சுமி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)