சிந்தனைச் சிதறல்.. கற்பனையில் களிப்பதை விட உள்ளதை ஏற்பதே மகிழ்ச்சி!
இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து கற்பனையில் களிப்பதை விட உள்ளதை உள்ளபடி ஏற்று அதன் நிலையில் மகிழ்வதே சிறப்பு.
செல்வச் செழிப்பில் திளைப்பவரும் கூட வயிறைத் தாண்டி உண்ணவும் முடியாது உடலைத் தாண்டி உறங்கவும் முடியாது என்பதை உளப்பூர்வமாய் ஏற்றாலே எதுவும் இல்லை என்ற நிலையே இல்லாமல் போய்விடும் நம்மில்.
இறைமையில் உறைந்திட இருப்பதில் நிறைவதே உயர்ந்த நல் ஆயுதம். எனவே இல்லையே என்று அங்கலாய்ப்பதை விட இருக்கும் ஒவ்வொன்றையும் நினைத்து பேர் உவகை கொள்வோம்.
மனக்குறையோடு மாட மாளிகையில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சி என்பதை அனுபவிக்கவே முடியாது. உணவிற்கும் உடைக்கும் உறையுளுக்கும் கூட நிரந்தரம் இல்லாமல் நிற்கதியாய் வீதியில் வசிக்கும் ஏழையிடம் இருக்கும் நிறைவில் எவ்வளவு இருக்கிறது நம்மில்?யோசிப்போம்;பிறரிடம் எதற்கும் யாசிக்காமல் வாழும் இவ்வாழ்வை நேசிப்போம். ஆம் இதுவே இறைவனின் உயரிய வரம் தானே.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)