சிந்தனைச் சிதறல்.. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இல்லை!

Su.tha Arivalagan
May 27, 2026,02:30 PM IST

- அ. தாமஸ்


இவ்வுலகில் தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இல்லை. கவனமுடன் காத்திருக்கும் பொழுதே போக்குவரத்து நெரிசல்களில் கூட சாலையைக் கடக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காத்திருப்பதில் கவனத்தை இழந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை தானே. எனவே கவனமாக இருப்போம் உரிய நேரத்தில் உயர்வானதைப் பெறுவோம்.


நினைத்தது கிடைக்காத பொழுது கிடைத்ததில் மகிழ்வோம்; நினைத்தது கிடைக்கும் வரை தொடர்ந்து முயல்வோம்.




விழிப்பாய் இருப்பவர்களே விடியலைக் காண்கிறார்கள். அதுபோல உழைப்பில் திளைப்பவர்களை விட உழைப்பதையும் விழிப்போடு செய்பவர்களே வாழ்வில் உயர்வைக் காண்கிறார்கள். எனவே விழிப்போடு உழைப்போம் இவ்வுலகில் உயரிய உறவாய் நிலைப்போம். 


உதவி வேண்டுவோருக்கு உள்ளதை இன்முகத்தோடு கொடுப்போம்;இல்லாத பொழுது இல்லை என்பதையும் இங்கிதம் அறிந்து மாற்று வழி உணர்த்தி மறுப்போம். இத்தகைய மறுத்தல்கள் கூட உதவி வேண்டுவோரில் நம்மை உயர்வாய் நிறுத்தும்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)