பராசக்தி படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? பொறுமையை சோதிக்கிறதா?

Su.tha Arivalagan
Jan 10, 2026,01:35 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகாததால் பராசக்தி படத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. கடைசி நிமிடம் வரை சென்சார் சான்று கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருந்து, ஒரு வழியாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகி உள்ளது. அதுவும் சென்சார் போர்டின் 25 கத்திரிகளுடன் பராசக்தி திரைக்கு வந்துள்ளது. இந்த படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்துள்ளதா அல்லது தியேட்டருக்கு வரும் ரசிகனின் பொறுமையை சோதித்துள்ளதா என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.


சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100வது படமாகவும் வெளி வந்துள்ள பராசக்தி, 1960-களில் நடக்கும் வரலாற்று அரசியல் பின்னணியைக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் மொழிப்பற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை தவிர படத்தை பற்றி பெரியதாக கதை என்று எதையும் சொல்ல முடியாது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். ஒரு தரப்பினர் இது ஒரு வலிமையான வரலாற்றுப் பதிவு என்று பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் படம் மிகவும் மெதுவாக நகர்வதாகவும், பொறுமையைச் சோதிப்பதாகவும் கூறுகின்றனர்.


சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் (வில்லன் கதாபாத்திரம்) ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலீலா மற்றும் அதர்வா தங்கள் பங்களிப்பை நேர்த்தியாகச் செய்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.




சில ரசிகர்கள் சுதா கொங்கராவின் மேக்கிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இடைவேளைக் காட்சி (Interval block) மற்றும் கிளைமாக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாகவும் மாஸாகவும் இருப்பதாகக் கூறுகின்றனர். உண்மையான வரலாற்றைத் தொய்வின்றிச் சொல்ல முயற்சித்துள்ளதாகப் புகழாரம் சூட்டியுள்ளனர்.இவை அனைத்துமே படத்திற்கு பிளஸாக பார்க்கப்படுகிறது.


படத்திற்கு மைனஸ் என்று பார்த்தால், படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதாகவும், காதல் காட்சிகள் தேவையற்ற நீளத்தைக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காதல் காட்சிகளில் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள். தணிக்கை வாரியம் (CBFC) சுமார் 25 இடங்களில் கத்தரி போட்டது படத்தின் ஓட்டத்தைப் பாதித்துள்ளதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.


மொத்தத்தில் 'பராசக்தி' திரைப்படம் ஒரு நேர்மையான முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், அதன் மெதுவான திரைக்கதை காரணமாக பொதுவான ரசிகர்களிடையே ஒரு கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கும், இவர்கள் கொடுத்த பில்டப் அளவிற்கு இல்லை என்றாலும் படம் பார்க்க சுமாராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.