தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

Su.tha Arivalagan
May 07, 2026,10:42 AM IST

சென்னை: தவெக ஆட்சியமைப்பது தாமதமாகி வருவதால், திமுக, அதிமுக வைத்து ஏகப்பட்ட வதந்திகளை தாறுமாறாக பரப்பி வருகின்றனர். பல ஊடகங்கள் கூட இதுகுறித்து ஆலோசிக்காமல் செய்திகள் வெளியிடுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.


திமுக, அதிமுகவை வைத்து நேற்று முதல் வெளியாகி வரும் எல்லாமே வதந்திகள்தான் என்பதை அந்த இரு கட்சிகளின் தலைமையும் உறுதிப்படுத்தியுள்ளன.


தவெக ஆட்சியமைக்க நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். அவர்கள் ஆட்சியமைக்கட்டும். அரசியல் நெருக்கடி ஏற்படுவதையோ, மறு தேர்தல் நடப்பதையோ திமுக விரும்பவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக சொல்லி விட்டார்.




அதேபோல அதிமுக தரப்பிலும் மொத்த எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியுடன்தான் உள்ளனர். எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் அனைவரும் தங்கியுள்ளதாக தெளிவாக  கூறி விட்டனர்.


ஒரு காலத்தில் திமுக அதிமுகவை இணைக்க முயற்சிகள் நடந்தது உண்மைதான். மறைந்த பிஜூ பட்நாயக் அதற்கான விருப்பத்தை வெளியிட்டு இரு தரப்பிலும் கூட பேசினார். அது பின்னர் நடக்காமல் போய் விட்டது. இந்த நிலையில் தவெக என்ற புதிய சக்தி தமிழ்நாட்டு அரசியலில் நுழைந்திருப்பதால் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாக நேற்று முதல் தகவல் பரப்பபப்பட்டு வருகிறது.


இது நிச்சயமாக வதந்தியாக மட்டுமே இருக்க முடியும். காரணம், இந்த இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைப்பதை அந்த கட்சியினரே முதலில் விரும்ப மாட்டார்கள். அதை விட முக்கியமாக பொதுமக்களிடம் இரு கட்சிகளின் செல்வாக்கும் அடியோடு சரிந்து போய் விடும். அவர்களின் எதிர்காலமும், அவர்கள் மீதான பிம்பமும் தகர்ந்து போய் விடும் அபாயமும் உள்ளது.


இது இந்த இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் கூட தெரியும். அப்படி இருக்கும்போது, எப்படி இந்த இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும் என்பது கேள்விக்குறி. எனவே திமுக அதிமுகவை வைத்து யார் வதந்தி கிளப்பியது என்று தெரியவில்லை. புதிய ஆட்சி அமையும் வர இப்படி ஏகப்பட்ட வதந்திகள் வந்தபடிதான் இருக்கும். படிக்கிறவங்கதான் பார்த்துப் படிக்கணும் போல!