நீ...ண்...ட!

Su.tha Arivalagan
Oct 15, 2026,11:12 AM IST

- ராஜஸ்ரீ


1) நீண்ட எழுத்து


என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்து ஸ்ரீநிவாசா, நீண்ட என்ற வார்த்தையில் ண் எழுத்துக்கு எத்தனை சுழி போடனும்? என்று கேட்டான்.


நான் காகிதமும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தேன். அதற்கு அவன் என்ன மௌன விரதமா? என்று கேட்டான்.


நான் சற்று பொறு என்று கையால் காண்பித்தேன். பிறகு அந்த காகிதத்தில் நீ என்று எழுதி பிறகு இரண்டு சுழிகளை போட்டேன்.


அதைப் பார்த் அவன் ஓ..இரண்டு சுழியா என்றான். நான் தொடர்ந்து மூன்று சுழி போட அவன் ஓ..மூன்று சுழியா என்றான்.


நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நாலு ஐந்து ஆறு என சுழிகளை போட்டுக் கொண்டே போனேன். அவன் என்னடா தமிழில் இல்லாத எழுத்தாக இருக்கிறதே. நீ எழுத்து சீர் திருத்தம் ஏதாவது செய்யப் போகிறாயா? என்று கேட்டான்.


அதற்கு நான் என்னைப் பொறுத்தவரை எழுத்தும் பேச்சும் நீண்டதாகத்தான்  இருக்கும் என்றேன்.


அப்பா, ஸ்ரீநிவாசா, ஆளை விடு என்று ஓட்டம் பிடித்தான்.


2) நீண்ட பேச்சு




பிறகு அந்த நண்பனே தன்  மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேச தெரியாத்தனமா என்னை அழைத்து விட்டான்.


நானும் அவன் அழைப்பை ஏற்று மணமக்களை வாழ்த்தி பேச ஆரம்பித்தேன். மாலை ஏழு  மணிக்கு எனது உரை ஆரம்பித்தது.


நான் பேசினேன் பேசினேன் பேசிக்கொண்டே போனேன். ஆனால் யாரும் கேட்கத் தயாராக இல்லை. அவரவர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்பிச் சென்று விட்டார்கள்.


மணி ஒன்பது ஆயிற்று. என் நண்பன் முடித்துக்கொள் என சைகையால் காண்பிக்க நானும் சரி என்று தலையாட்டினேன். பிறகு அங்கும் இங்கும் பார்த்தேன். 


நண்பன் என்ன தேடுகிறாய்? என்று கேட்க நான் புது மண தம்பதிகள் எங்கே? அவர்களை வாழ்த்த வேண்டுமே என்றேன்.


அதற்கு அவன் அவர்கள் எப்பொழுதோ  சாப்பிட்டுவிட்டு முதலிரவுக்கு போயாச்சு. நீ வாழ்த்த வேண்டும் என்று விரும்பினால்  இங்கு ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். அவர்களை  வாழ்த்தி விடு என்று கூற நானும் இந்த தம்பதிகள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன் என்றேன்.


அந்த தம்பதியினர் உங்கள் வாக்கு பலிக்கட்டும் என்று நன்றி தெரிவித்தனர். 


அந்த தம்பதியில் கணவனுக்கு வயது 90 மனைவிக்கு வயது 84.


இனி அவர்கள் எங்கு பல்லாண்டு காலம் வாழ்வது? அதற்குப்பின் என்னை யாரும் வாழ்த்திப் பேச அழைப்பதில்லை.


(ராஜஸ்ரீ அவர்களின் இயற்பெயர்   வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)