அறுவை அழகேசன்
- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்
அந்த ஊர் மக்கள் யாருக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ அழகேனுக்கு பயப்படுவார்கள். காரணம் அவரிடம் மாட்டிக் கொண்டால் போதும் அறுத்துத் தள்ளிவிடுவார். அதனாலேயே மக்கள் அவரை அறுவை அழகேசன் என அழைத்தனர்.
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழிப் போல அழகேசனைக் கண்டால் அப்பால் போய் விடு என்ற புது மொழியை உருவாக்கினர்.
ஒரு நாள் அவர் சாலையில் சென்று கொண்டிருந்தார். எதிரே இளைஞன் மாணிக்கம் வந்து கொண்டிருந்தான்.
மாணிக்கம், இங்க வா என்று அழைத்தார்.
பார்த்தான் மாணிக்கம். ஐய்யய்யோ, இவர்கிட்ட மாட்டிண்டோமே. தப்பிக்க வேண்டியதுதான் என்று எண்ணி அண்ணே, அவசரமா போயிண்டிருக்கேன் என்றேன்.
என்ன அவசரம்? இங்கே வா என்றார்.
மாணிக்கம் மனதிற்குள் கடவுளே, என்னை காப்பாத்து என வேண்டிக்கொண்டு அவரிடம் சென்றான்.
"நேற்று தலைவர் பேசின கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்தாங்க" என்று கேட்டார்.
"இருபது பேர் வந்தாங்க" என்றான்.
"இதெல்லாம் ஒரு கூட்டமா? நான் ஒரு இடத்தில பேசினேன் பாரு. இரண்டு கோடி பேர் வந்தாங்க" என்றார்.
மாணிக்கம் ஆச்சரியத்துடன் இரண்டு கோடி பேரா? உலகத்தில் எந்த தலைவருக்கும் அந்த அளவு கூட்டம் வந்திருக்காதே. உங்களுக்கு மட்டும் எப்படி வந்தாங்க? என்று கேட்டான்.
"ஹி..ஹி.. இரண்டு பேர்தான் வந்தாங்க" என்றார்.
"அப்ப எப்படி இரண்டு கோடி பேர்னு சொன்னீங்க?" என்று கேட்டான்.
அழகேசனும் வந்தவர்கள் புண்ணிய கோடி, தனகோடி. இரண்டு கோடியாச்சா என்றார். மாணிக்கம் மனதிற்குள் செத்தேன் என்று கூறிக் கொண்டான்.
அழகேசன் தொடர்ந்து நான் ஒரு இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு மக்களே, எண்ணிப் பாருங்கள் என்றேன். உடனே ஒருத்தர் இருக்கிறது இரண்டு பேர் என்னத்தை எண்ணிப் பார்க்கிறது அப்படீன்னார் என்றார்.
தனக்குள் இவரையும் மடக்கறதுக்கு ஒருத்தன் இருக்கானே என மாணிக்கம் சந்தோஷப்பட்டான்.
இன்னொரு கூட்டத்துல பேசினேன். நூறு பேர் வந்தாங்க என்றார் அழகேசன்.
மாணிக்கம் அண்ணே, உண்மையா சொல்லுங்க. நூறு பேர்தானா? என்று கேட்டான்.
அழகேசன் சிரித்தவாறு ஒருத்தர்தான் வந்தார் என்றார்.
அப்ப. ஏண்ணே நூறு பேர்னு சொன்னீங்க? என்று கேட்டான் மாணிக்கம்.
அழகேசன் சிரித்தவாறு ரஜினிகாந்த் சொல்வாரே நான் ஒரு தரம் சொன்னா நூறுதரம் சொன்ன மாதிரின்னு. அதுபோல எனக்கு ஒருத்தர் வந்தா நூறு பேர் வந்த மாதிரி. அவர் வந்த சந்தோஷத்துல அரை மணி பொழிஞ்சு தள்ளிட்டேன். அப்புறம் அவர்கிட்ட போய் என் பேச்சை கேட்கறதுன்னா ரொம்ப ஆர்வமா அப்படீன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார் பாரு....என்று இழுத்தார்.
என்ன சொன்னார்? என்று கேட்டான் மாணிக்கம் ஆர்வமாக.
"சார், இந்த மைக் செட்டெல்லாம் நான்தான் கொண்டு வந்தேன். பேசிட்டீங்க இல்லை. பணத்தை கொடுங்க. நான் போகனும் அப்படீன்னார்" என்றார் அழகேசன்.
மாணிக்கம் மனதிற்குள் என்னமோ பெரிய பேச்சாளர் மாதிரி தம்பட்டம் அடிச்சிண்டிருக்கிறார் என்று கூறிக்கொண்டான்.
மறுபடியும் ஆழகேசன் இன்னொரு கூட்டத்தில்.. என்று ஆரம்பித்தவுடனேயே அண்ணே, அவசர வேலை இருக்கு. என்னை விட்டுடுங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒரு ஓட்டம் பிடித்தான் மாணிக்கம்.
வேறு யாராவது மாட்டுவார்களா என சுற்றும் முற்றும் பார்த்தார் அழகேசன்.
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)